இயற்கை இடர்பாடுகளுக்கு உடனடி நிவாரணம்


இயற்கை இடர்பாடுகளுக்கு உடனடி நிவாரணம்
x

வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் இயற்கை இடர்பாடுகளுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் கற்பகம் தெரிவித்தார்.

பெரம்பலூர்

ஆய்வு கூட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து அரசு துறை அலுவலர்களுடான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி பேசுகையில், அனைத்து துறை அலுவலர்களுக்கும் விழிப்புணர்வு இருக்க வேண்டும். மேலும் பேரிடரின் போது காவல்துறை, தீயணைப்புத்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் இதர துறையினருடன் ஒருங்கிணைந்து செயல்படுதல் வேண்டும். பேரிடரின் போது பொது கட்டிடங்களை முகாம்களாக பயன்படுத்த ஏதுவாக மாவட்ட பேரிடர் மேலாண்மை திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் போதுமானதாகவும், தகுதியானதாகவும் உள்ளதா? என ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்து அனுப்ப வேண்டும்.

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை...

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும், மேற்படி நீர்நிலைகளின் கரைகளின் உறுதி தன்மையினை ஆராய்ந்து, பலவீனமாக உள்ள கரைகளை பலப்படுத்த ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும். அவசர காலங்களில் கிராமங்களில் இருந்து பாதுகாப்பாக வெளியேறும் வழிகளுடன் கூடிய செயல் திட்டத்தினை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் மூலமாக தயார் செய்து வைத்திருத்தல் வேண்டும். மேலும் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் இழப்பீடுகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வட்ட அளவில் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளை கண்டறிந்து, அப்பகுதிகிளல் தீயணைப்பு துறையினரின் செயல்முறை விளக்கம் நடத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நீர்நிலைகளில் பொதுமக்கள், சிறுவா்கள் இறங்குவதால் ஏற்படும் உயிர் இழப்புகளை தவிர்க்க நீர்நிலைகளின் ஆழமான பகுதிகள் குறித்த முன்னெச்சரிக்கை விளம்பர பலகையினை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கரைகளில் வைக்க வேண்டும். வெள்ள தடுப்பு பணிக்காக போதுமான அளவில் மணல் மூட்டைகள் மற்றும் சவுக்கு குச்சிகளை தேவைப்படும் இடங்களில் முன்னதாகவே இருப்பு வைத்திட வேண்டும் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லலிதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மஞ்சுளா மற்றும் அனைத்து அரசு துறைகளின் முதல் நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story