குழந்தைகள் தொடர்பான புகார் மீது உடனடி நடவடிக்கை -போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா பேச்சு


குழந்தைகள் தொடர்பான புகார் மீது உடனடி நடவடிக்கை -போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா  பேச்சு
x
தினத்தந்தி 14 July 2023 7:20 PM GMT (Updated: 15 July 2023 12:15 PM GMT)

குழந்தைகள் தொடர்பான புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா தெரிவித்தார்.

திருச்சி

குழந்தைகள் தொடர்பான புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா தெரிவித்தார்.

சிறப்பு பெட்டிசன் மேளா

திருச்சி மாநகரில் உள்ள மூத்த குடிமக்களின் குறைகளுக்கான மனுக்களுக்கு தீர்வு காண சிறப்பு பெட்டிசன் மேளா திருச்சியில் நடந்தது. மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா கலந்து கொண்டு மனுக்களை பெற்றார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருச்சி மாநகரைப் பொறுத்தவரை கடந்த ஜனவரி மாதம் முதல் இந்நாள் வரை 2 ஆயிரம் புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 1,700 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். மூத்த குடிமக்களுக்கு உள்ள பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்கள் கொடுக்கும் மனுக்களை பெற்று கொண்டு நேரடியாக இல்லத்திற்கே சென்று பிரச்சினைகளை சரி செய்வதற்கான நடவடிக்கையை காவல்துறை முன்னெடுத்துள்ளது.

குழந்தைகள் தொடர்பான புகார்

இதேபோல் மாதந்தோறும் ஒரு சிறப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் வருகையை பொறுத்து, மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், அந்தந்த பகுதிகளில் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு முகாம் நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுவரை திருச்சி மாநகரில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை கண்காணித்ததில் தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 70 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.

குழந்தைகள் சம்பந்தமான புகார்களுக்கு ஏற்கனவே தொலைபேசி எண் கொடுக்கப் பட்டுள்ளது. 24 மணி நேரமும் அந்த தொலைபேசியை தொடர்பு கொண்டு புகாரை தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சத்திரம் பஸ் நிலையத்தில் பெண்ணை தாக்கிய பெண் போலீஸ் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, முழுமையானவிசாரணை முடிந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

முகாமிற்கு மாநகர போலீஸ்

துணை கமிஷனர் (தெற்கு) செல்வக்குமார் முன்னிலை வகித்தார். ஸ்ரீரங்கம் பகுதி போலீஸ் உதவி கமிஷனர் நிவேதா லட்சுமி வரவேற்றார். முகாமில் மாநகரில் உள்ள அனைத்து பகுதி போலீஸ் உதவி கமிஷனர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டு அந்தந்த பகுதியில் இருந்து வந்த மூத்த குடிமக்களுக்கான குறைகளை தீர்ப்பதற்கான பணிகளை செய்தனர்.


Next Story