சிறுமியிடம் சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்த விவகாரம்: "முன்ஜாமீன் கோரியவர் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமானவை"-மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


சிறுமியிடம் சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்த விவகாரம்: முன்ஜாமீன் கோரியவர் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமானவை-மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 19 July 2023 9:31 PM GMT (Updated: 20 July 2023 10:19 AM GMT)

சிறுமியிடம் சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டவரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


சிறுமியிடம் சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டவரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சிறுமியின் கருமுட்டை

ஈரோடு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டு, அவரது கருமுட்டைகள் எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாக கடந்த ஆண்டு புகார் எழுந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரித்தனர். இதில் பலமுறை அவரது கர்ப்பப்பையில் இருந்து கருமுட்டைகள் எடுக்கப்பட்டு பல்வேறு ஊர்களுக்கு அனுப்பப்பட்டது தெரியவந்தது. இதற்காக அந்த சிறுமி சேலம், திருவண்ணாமலை, திருப்பதி என பல்வேறு ஊர்களுக்கு பலமுறை அழைத்துச் செல்லப்பட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இது தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதே போல பல்வேறு சிறுமிகள் கருமுட்டைக்காக கடத்தப்பட்டனரா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சிறுமியிடம் கருமுட்டை எடுத்த மருத்துவமனைகள் மீது தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த வழக்கில் சிறுமியின் தாயார், வளர்ப்பு தந்தை, புரோக்கர்கள் கைதானார்கள். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக மாரிமுத்து என்பவர் ேசர்க்கப்பட்டார்.

குற்றச்சாட்டுகள் தீவிரமானவை

இதே போல தஞ்சாவூரை சேர்ந்த ஒரு இளம் பெண்ணிடம் கருமுட்டையை எடுக்க முயன்றதாக தஞ்சாவூர் அனைத்து மகளிர் போலீசார் பதிவு செய்த வழக்கிலும் முக்கிய குற்றவாளியாக அதே மாரிமுத்து சேர்க்கப்பட்டார். அவர் தலைமறைவாக இருந்து வருகிறார். தற்போது அவர் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது கூடுதல் அரசு வக்கீல் பா.நம்பி செல்வன் ஆஜராகி, மனுதாரர் மீது சுமத்தப்பட்டு உள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை. இந்த சம்பவங்களுக்கு மனுதாரர்தான் முக்கிய காரணமாக இருந்துள்ளார். அவரிடம் நேரில் போலீசார் விசாரித்தால்தான் பல்வேறு உண்மைகள் வெளிப்படும். இந்த சூழ்நிலையில் மனுதாரருக்கு முன் ஜாமீன் அளிக்கக்கூடாது. இதே வழக்கில் தொடர்புடைய வெண்ணிலா என்பவரின் முன் ஜாமீன் மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது என்று வாதாடினார்.

மனு தள்ளுபடி

அரசு வக்கீல் வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுதாரர் மீதான வழக்கின் தீவிர தன்மையை கருத்தில் கொண்டு இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று உத்தரவிட்டார்.


Next Story