கிள்ளை தபால் நிலையத்தை இருளர்கள் முற்றுகை


கிள்ளை தபால் நிலையத்தை இருளர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 22 July 2023 6:45 PM GMT (Updated: 22 July 2023 6:45 PM GMT)

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கிள்ளை தபால் நிலையத்தை இருளர்கள் முற்றகையிட்டு பேராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்

புவனகிரி

முற்றுகை

மணிப்பூர் கலவரம் மற்றும் அங்கு 2 பெண்களுக்கு நேர்ந்த கொடூர சம்பவத்தை கண்டித்து கிள்ளை அருகே உள்ள எம்.ஜி.ஆர். நகர், கலைஞர் நகர், தளபதி நகர், சிசில் நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் இருளர் இன மக்கள் கிள்ளை கடைவீதியில் உள்ள தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பேரூராட்சி மன்ற தலைவர் மல்லிகாமுத்துக்குமார் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினரும், பேரூராட்சி மன்ற துணை தலைவருமான கிள்ளைரவீந்திரன் கலந்து கொண்டு பேசினார். மணிப்பூர் சம்பவம் மற்றும் மத்திய அரசை கண்டித்து அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து அவர்கள் தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர். சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் பின்னர், அவர்களாகவே கலைந்து சென்றனர். முடிவில் எம்.ஜி.ஆர். நகர் கிராம தலைவர் செஞ்சி நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டம்

இேதபோன்று, ஸ்ரீமுஷ்ணம் கடைவீதி காமராஜ் சிலை அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் ஆகியன சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட தலைவி தேன்மொழி தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க வட்ட செயலாளர் வெற்றிவீரன் முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் பிரகாஷ் கலந்து கொண்டு ஆா்ப்பாட்டம் குறித்து பேசினார்.

இதில் பங்கேற்றவர்கள், மணிப்பூர் கலவரம் மற்றும் 2 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், இந்த கலவரத்தை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கிருஷ்ணமூர்த்தி, வளர்மதி, வையாபுரி, மணி உள்ளிட்ட கட்சி் நிர்வாகிகள், மாதர் சங்கத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story