மக்கள் விரோத திட்டங்களை மத்திய அரசு திணிக்க நினைத்தால் கடுமையாக எதிர்ப்போம்- ம.தி.மு.க. மாநாட்டில் வைகோ சூளுரை


மக்கள் விரோத திட்டங்களை மத்திய அரசு திணிக்க நினைத்தால் கடுமையாக எதிர்ப்போம்- ம.தி.மு.க. மாநாட்டில் வைகோ சூளுரை
x

மக்கள் விரோத திட்டங் களை மத்திய அரசு திணிக்க நினைத்தால் கடுமையாக எதிர்ப் போம் என ம.தி.மு.க. மாநாட்டில் வைகோ பேசினார்.

மதுரை

மக்கள் விரோத திட்டங் களை மத்திய அரசு திணிக்க நினைத்தால் கடுமையாக எதிர்ப் போம் என ம.தி.மு.க. மாநாட்டில் வைகோ பேசினார்.

ம.தி.மு.க. மாநாடு

மதுரை வலையங்குளத்தில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ம.தி.மு.க. சார்பில் மாநில மாநாடு நேற்று நடந்தது. வரவேற்புக்குழு தலைவர் புதூர் பூமிநாதன் எம்.எல்.ஏ. வரவேற்று பேசினார். மாநாட்டினை முன்னிட்டு, மாலை 4 மணிக்கு கட்சி கொடி ஏற்றப்பட்டது. அதன்பின்னர், திராவிட இயக்க சுடர் ஏற்றப்பட்டு, அண்ணா, பெரியார் போன்றவர்களின் படங்கள் திறந்து வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இதுபோல் இந்துத்துவ பாசிசம் வேரறுப்போம், இந்தியாவின் எதிர்காலம், சமூகநீதி காப்போம், திராவிட இயக்கத்தின் சாதனைகள், அண்ணாவின் மாநில சுய ஆட்சி, அண்ணா ஏற்றிய அறிவுச்சுடர், நாடாளுமன்றத்தில் வைகோ உள்ளிட்ட தலைப்புகளில் மாநில நிர்வாகிகள் பேசினர். நிறைவுரையாக ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

7 ஆயிரம் கிலோ மீட்டர் நடைபயணம்

மதுரை மக்களுக்கு இன்று குடிநீர் கிடைக்கிறது என்றால் அது முல்லை பெரியாறு உரிமைக்காக நான் போராட்டம் நடத்தியது தான் காரணம். முல்லை பெரியாறு, நியூட்ரினோ, மேகதாது அணைக்கு எதிராக என தமிழக மக்கள் நலனுக்காக இதுவரை 7 ஆயிரம் கிலோ மீட்டர் நடை பயணம் சென்றுள்ளேன். அப்போதெல்லாம் நான் நட்சத்திர ஓட்டலிலோ, பங்களாவிலோ தங்கவில்லை. சாலையோரத்தில் மரக்கிளை, இலை மேல் படுத்து நடை பயணம் சென்றேன். இது போல் மக்களுக்காக பலமுறை நடை பயணம் மேற்கொண்டு இருக்கிறேன்.

நியூட்ரினோ கனவு திட்டம் என பிரதமர் மோடி கூறினார். ஆனால் அந்த திட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்து மூன்றரை ஆண்டுகள் நிறுத்தி வைத்துள்ளேன். தற்போதும் அந்த வழக்கு நடந்து வருகிறது.

இதுபோல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக 5 முறை உண்ணாவிரதம், 3 முறை மறியல் போராட்டங்களை நடத்தினேன். அந்த திட்டம் வந்தால் தேனி மாவட்டமே தவிடுபொடியாகி விடும். இது தவிர மதுவுக்கு எதிரான போராட்டம் நடந்த போது என் தாயாரும் அதில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக அவர் உயிரிழந்தார்.

பொய் பிரசாரம்

ஸ்டெர்லைட் போராட்டத்தில் என் மகன் அந்த நிறுவனத்திடம் பணம் வாங்கியதாக பொய் பிரசாரம் செய்கின்றனர். இதனால் என் உறவினர் தீக்குளித்து உயிரிழந்தார். மக்கள் நலனுக்காக போராடியபோது உயிர் தியாகம் செய்தது எங்கள் குடும்பம். மக்கள் விரோத திட்டங்களை மத்திய அரசு திணிக்க நினைத்தால் ம.தி.மு.க. கடுமையாக எதிர்க்கும்.

விடுதலை புலிகளை நான் ஆதரித்தேன் என என் மீது பழிச்சொல்லும் உண்டு, பாராட்டும் உண்டு. கருணாநிதி நினைத்ததை நான் பேசுவேன் என என்னிடம் பலமுறை அவரே கூறியுள்ளார். இரண்டு முறை அவருக்கு ஆபத்து வந்தபோது நான் காப்பாற்றினேன். அதையும் மறக்க முடியாது அந்த வகையில் தற்போது நான் பேச நினைத்ததை என் மகன் பேசிவிட்டார். பதவிக்காக நான் இல்லை என என் மகன் பேசியுள்ளார். நான் நினைத்ததை கூறியுள்ளார். உடல் நிலை சரியில்லாமல் நான் இருந்தபோது கட்சியினரை என் சார்பில் எனக்கு தெரியாமல் என் மகன் சந்தித்து வந்தார். பதவிக்காக இதெல்லாம் செய்கிறாரே என்ற எண்ணத்தில் இருந்தேன். ஆனால் பதவி ஆசையில் அவர் எதையும் செய்யவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

துரை வைகோ

முதன்மை கழகச் செயலாளர் துரை வைகோ பேசியதாவது:-

சனாதனம் என்பது நீ உயர்ந்தவர் நான் தாழ்ந்தவர் என்ற தாழ்வு மனப்பான்மையை உருவாக்குகிறது. சனாதன கலாசாரம் குலக்கல்வியை வலியுறுத்துகிறது. உயர்ந்தவருக்கு ஒரு வேலை தாழ்ந்தவருக்கு ஒரு வேலை என்ற மனப்பான்மையை வழங்குகிறது.

சனாதனத்தை அம்பேத்கர், பெரியார், அண்ணா போன்றவர்கள் எதிர்த்தனர். திராவிட இயக்கங்களும் எதிர்த்தது. நாங்கள் இந்து மதத்திற்கும், இந்து மதத்தை பின்பற்றுபவர்களுக்கும் எதிரானவர்கள் அல்ல. திராவிட இயக்கங்களால் சனாதனத்தை அழிக்க முடியும். 50 வருடங்களுக்கு முன்பே சனாதனம் எனும் கொடிய விலங்கின் முதுகெலும்பை அண்ணா, பெரியார் போன்றவர்கள் ஒடித்தனர். எனவே சனாதனத்தை வேரறுக்க வேண்டியது. ஒவ்வொரு தனி மனிதனின் கடமையாகும். கட்சியின் மீது எனக்கு எந்த ஒரு தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு கிடையாது. எந்த பதவிகள் வழங்கினாலும் ம.தி.மு.க. தொண்டர் என்று கூறுவது தான் எனக்கு பெருமை.

இவ்வாறு அவர் கூறினார்.

முடிவில், மாநகர் மாவட்ட செயலாளர் முனியசாமி நன்றி கூறினார்.

இந்த மாநாட்டில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் குரோம்பேட்டை நாசர், தாம்பரம் மாநகராட்சி முஜிபுர் ரகுமான், சென்னை மண்டல மாவட்ட செயலாளர்கள் சு.ஜீவன், கே.கழககுமார், டி.சி.ராஜேந்திரன், பா.சுப்ரமணி, மு.பாபு, ஊனை பார்த்திபன், வளையாபதி, எஸ்.சூர்யகுமார், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட நிர்வாகிகள் படப்பை கா.செல்வம், எஸ்.நாராயணன், ஆர்.ஏ.ஜெயசீலன், மாங்காடு பி.முருகன், மலர்க்கொடி பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் மாநாட்டில், தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story