"72 மணி நேரத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால்..." - தமிழக அரசுக்கு அண்ணாமலை கெடு


72 மணி நேரத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால்... - தமிழக அரசுக்கு அண்ணாமலை கெடு
x

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வதாகவும், பிரதமர் நமக்காக பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.

சென்னை,

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத விலையேற்றத்தை சந்தித்து மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்துள்ளது.

பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கப்படுவதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். இந்த வரிக்குறைப்பின் மூலம் பெட்ரோல், ஒரு லிட்டர் ரூ. 9.5 மற்றும் டீசல் ரூ.7 குறையும் என்றும் மாநிலங்களில் வாட் வரியை குறைக்க வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வதாகவும், பிரதமர் மோடி நமக்காக பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் கூறியது போல் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று தெரிவித்த அவர், இன்னும் 72 மணி நேரத்தில் தமிழக அரசு விலையை குறைக்காவிட்டால் தமிழக பாஜக சார்பில் கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.


Next Story