'கவர்னரிடம் ஒரு மசோதா இருக்கிறது என்றால் அதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும்' - தமிழிசை சவுந்தரராஜன்


கவர்னரிடம் ஒரு மசோதா இருக்கிறது என்றால் அதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும் - தமிழிசை சவுந்தரராஜன்
x
தினத்தந்தி 26 Aug 2023 1:38 PM GMT (Updated: 26 Aug 2023 5:24 PM GMT)

நீட் தேர்வுக்கு எதிராக பேசுவது மாணவர்களுக்கு செய்யும் துரோகம் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

கோவை,

கவர்னர் ஒரு மசோதாவை வைத்திருக்கிறார் என்றால் அதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும் என்று புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் கூறியதாவது;-

"கவர்னர் என்ற பதவியை துச்சமாக நினைத்து பலர் பேசி வருவதைப் பார்க்க முடிகிறது. எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் மாநில முதல்-அமைச்சர், கவர்னரை சந்தித்துப் பேசி அதற்கான முடிவை கொண்டு வரலாம் என்று அரசியலைப்பு சட்டத்தின் 167-வது பிரிவில் கூறப்பட்டுள்ளது.

அதை பயன்படுத்தாமல் கவர்னரை தரக்குறைவாக விமர்சனம் செய்து கொண்டே இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதே போல் கருப்புக்கொடி காட்டுவதும் நல்ல பழக்கம் இல்லை. கருத்தால் மோதுங்கள், கருப்புக்கொடியால் மோதாதீர்கள் என்பது தான் எனது கருத்து.

நீட் தேர்வுக்கு நான் முதலில் இருந்தே ஆதரவு தெரிவித்து வருகிறேன். அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வை ஏற்கிறார்கள். தமிழகத்தில் இது தேவையில்லாமல் அரசியலாக்கப்படுகிறது. நீட் தேர்வுக்கு எதிராக பேசுவது மாணவர்களுக்கு செய்யும் துரோகம்.

திருப்பதியில் 13 ஆண்டுகளாக விவசாயம் செய்துகொண்டிருந்த ஒரு நபர், தற்போது நீட் தேர்வு எழுதி மருத்துவ கல்லூரியில் சேரப் போகிறார். இது போன்ற வெற்றிக் கதைகளை மாணவர்களிடம் சொல்லுங்கள், வெற்றுக் கதைகளை சொல்லாதீர்கள்.

எப்போது மசோதாக்கள் வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டு உடனடியாக கையெழுத்து போட்டு அனுப்புவதற்கு கவர்னர்கள் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் இல்லை. கவர்னர் ஒரு மசோதாவை வைத்திருக்கிறார் என்றால் அதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும்."

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.



Next Story