மரக்காணம் அருகே மூதாட்டி மர்மசாவில் கணவர் கைது
மரக்காணம் அருகே சொத்து தகராறில் மூதாட்டியை கழுத்தை இறுக்கி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
மரக்காணம்,
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எம்.புதுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லக்கண்ணு (வயது 72). அவரது மனைவி ஞானாம்பாள் (65). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன் தனது வீட்டில் உடல் எரிந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஞானாம்பாள் எப்படி இறந்தார் என்பது குறித்து அவரது கணவர் செல்லக்கண்ணுவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், தனக்கும், மனைவிக்கும் ஏற்பட்ட குடும்ப தகராறில் மனமுடைந்த ஞானாம்பாள் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தார்.
பிரேத பரிசோதனையில் அம்பலம்
இந்தநிலையில் ஞானாம்பாளின் பிரேத பரிசோதனை அறிக்கை போலீசாரிடம் வழங்கப்பட்டது. அதில், ஞானாம்பாள் கழுத்து இறுக்கி கொலை செய்யப்பட்டது அம்பலமானது. இதுபற்றி செல்லக்கண்ணுவிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஞானாம்பாளை செல்லக்கண்ணு கொலை செய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
இதுபற்றிபோலீசார் கூறியதாவது:-
செல்லக்கண்ணுவுக்கும், ஞானாம்பாளுக்கும் சொத்து தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறின்போது, மனைவியின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் கொலையை மறைப்பதற்காக அவரது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்து கொளுத்தி, அவர் தற்கொலை செய்துகொண்டதுபோல் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்து செல்லக்கண்ணு நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது.
கைது
இதையடுத்து செல்லக்கண்ணுவை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். சொத்து பிரச்சினைக்காக மனைவியை கணவரே கொலை செய்து நாடகமாடிய சம்பவம் மரக்காணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.