அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி கணவன்-மனைவி சாவு


தினத்தந்தி 4 Jan 2023 6:45 PM GMT (Updated: 4 Jan 2023 6:45 PM GMT)

ஆலாந்துறை அருகே அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி கணவன்-மனைவி உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் 100 மீட்டர் தூரம் இழுத்துச்செல்லப்பட்டன.

கோயம்புத்தூர்

ஆலாந்துறை

ஆலாந்துறை அருகே அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி கணவன்-மனைவி உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் 100 மீட்டர் தூரம் இழுத்துச்செல்லப்பட்டன.

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தூய்மை பணியாளர்கள்

கோவை சிறுவாணி ரோடு ஆலாந்துறை அருகே உள்ள கள்ளிப்பாளையம் பட்டாளம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 45). இவருடைய மனைவி தேவி(33). இவர்களுக்கு தர்னிஷ், வாசுலேகா ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கணவன்-மனைவி 2 பேரும், பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் தற்காலிக தூய்மை பணியாளர்களாக வேலை பார்த்து வந்தனர். இவர்கள் நேற்று காலை 6 மணியளவில் வழக்கம்போல் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டு சென்றனர். சைக்கிளை ராஜேந்திரன் ஓட்டினார்.

அரசு பஸ் மோதியது

ஆலாந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்றபோது, பின்னால் வந்த அரசு பஸ் திடீரென சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜேந்திரன், தேவி ஆகியோர் சாலையில் விழுந்து பலத்த காயம் அடைந்தனர்.

இதை கவனிக்காமல் டிரைவர் தொடர்ந்து பஸ்சை இயக்கி சென்றார். இதனால் அவர்கள் பஸ் சக்கரத்தில் சிக்கினர். இதன் காரணமாக உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே கணவன்-மனைவி உயிரிழந்தனர். மேலும் அவர்களது உடல்கள் அப்படியே சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்டன. இதை கண்ட அக்கம்பக்கத்தினர் கூச்சலிட்டனர். உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தினார்.

டிரைவர் சரண்

இதுகுறித்து ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் விபத்தை ஏற்படுத்திய டிரைவரான மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த குபேந்திரன்(38), அரசு பஸ்சுடன் தொண்டாமுத்தூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

வேலைக்கு சென்ற தூய்மை பணியாளர்கள் 2 பேர், அரசு பஸ் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்து உள்ளதால், நடுவே டிவைடர் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story