பெண் போலீசுக்கே இப்படி... சாதாரண பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு கிடைக்கும்? குஷ்பு கேள்வி


பெண் போலீசுக்கே இப்படி... சாதாரண பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு கிடைக்கும்? குஷ்பு கேள்வி
x

போலீசுக்கே இப்படி என்றால் சாதாரண பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு கிடைக்கும்? தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையே நிலவுகிறது என குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.


சென்னை,

சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு கடந்த 23-ந்தேதி இரவு புறப்பட்ட மின்சார ரெயிலின் மகளிர் பெட்டியில் போதை ஆசாமி ஒருவர் ஏறி உட்கார்ந்து இருப்பதை தட்டிக்கேட்ட ரெயில்வே பெண் போலீஸ் ஆசிர்வாவை அந்த நபர் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதனால் தனது உயிரை தற்காத்து கொள்ள ஓடும் ரெயிலில் கீழே குதித்த ஆசிர்வா, ரத்த காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.பெண் போலீசை கத்தியால் குத்திய நபர் ரெயிலில் தப்பி சென்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக சி.சி.டி.வி. காட்சி பதிவு ஒன்று நேற்று வெளியானது. அதில், ரெயில்வே பெண் போலீஸ் ஆசிர்வா, கத்திகுத்து காயங்களுடன் ஓடும் ரெயிலில் இருந்து கீழே தண்டவாளத்தில் குதித்து, பின்னர் உடனடியாக ரெயில் நிலைய நடைமேடையை நோக்கி ஓடிவரும் காட்சி பதிவாகியுள்ளது. எழும்பூர் ரெயில்வே போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதன் முதல்கட்டமாக கடற்கரை ரெயில் நிலையம் முதல் செங்கல்பட்டு வரை இடையே உள்ள ரெயில் நிலையங்களின், சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிப் பதிவுகளை, போலீசார் தீவிரமாக ஆராய்ந்து வந்தனர். எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு மற்றும் சென்டிரல் குற்றப்பிரிவு போலீசார் உள்ளிட்ட 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 20-க்கும் மேற்பட்ட ரெயில்வே போலீசார் தப்பியோடிய நபரை தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், பெண் போலீஸ் ஆசிர்வாவை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய தனசேகர் என்பவரை எழும்பூர் ரெயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.

ரெயில் நிலையத்தில் சீருடைகள் இருந்த பெண் காவலருக்கு நடந்த இந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையே நிலவுகிறது என நடிகையும் பாஜகவைச் சேர்ந்தவருமான குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,

"பெண்களுக்கு பாதுக்காப்பு வழங்குவதில் முதல்வர் ஸ்டாலின் அரசு தோல்வியடைந்துள்ளது. ஒரு பெண் போலீசுக்கே பாதுகாப்பற்ற சூழ்நிலை தான் ஏற்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. போலீசுக்கே இப்படி என்றால் சாதாரண பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு கிடைக்கும்? தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையே நிலவுகிறது." என பதிவிட்டுள்ளார்.


Next Story