வீடு புகுந்து திருடியவர் கைது
ஆற்காடு அருகே வீடு புகுந்து திருடியவர் கைது செய்யப்பட்டார்.
திமிரி போலீசார் நேற்று திமிரியை அடுத்த சலமனத்தம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்களில் வந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் முன்னுக்குபின் முரணாக பதில் கூறவே போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். அதில் அவர் வேலூர் சலவன் பேட்டை பகுதியைச் சேர்ந்த சசிகுமார் (வயது 46) என்பதும், கடந்த பிப்ரவரி மாதம் 9-ந் தேதி திமிரியை சேர்ந்த ஆசிரியை அகிலா வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகைகள், ரூ.50,000 திருடி சென்றது தெரியவந்தது.
மேலும் நேற்று முன்தினம் ஆற்காடு அடுத்த உப்புபேட்டை பகுதியில் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த திமிரியை அடுத்த காவனூர் பகுதியைச் சேர்ந்த வடமலை என்பவரது பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.3 ஆயிரத்தை திருடி சென்றதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள், 3 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், பணம் ரூ.3000, வீட்டின் பூட்டை உடைக்க பயன்படுத்திய ஸ்குரு டிரைவர், கட்டிங் பிளேயர் ஆகியவற்றை போலிசார் பறிமுதல் செய்தனர்.