கேரளாவுக்கு 2 வாகனங்களில் கடத்த முயன்ற3½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கேரளாவுக்கு 2 வாகனங்களில் கடத்த முயன்ற 3½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
தக்கலை:
கேரளாவுக்கு 2 வாகனங்களில் கடத்த முயன்ற 3½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ரேஷன் அரிசி கடத்தல்
குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. இதை தடுக்க மாவட்ட வருவாய் அதிகாரிகளும், போலீசாரும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று காலை கல்குளம் வட்டவழங்கல் அலுவலர் சுனில்குமார் தலைமையில் அதிகாரிகள் சுங்கான்கடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த கூண்டு கட்டிய மினி டெம்போவை நிறுத்த சைகை காட்டிய போது, அது நிற்காமல் சென்றது.
3½ டன் ரேஷன் அரிசி
உடனே அதிகாரிகள் அந்த டெம்போவை துரத்தி சென்றனர். சிறிது தூரம் சென்றதும் வாகனத்தை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார். உடனே அதிகாரிகள் கீழே இறங்கி அந்த வாகனத்தில் சோதனையிட்டபோது, அதில் 3 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி இருந்ததும், அதை கேரளாவுக்கு கடத்த முயன்றதும் தெரிய வந்தது. அரிசியையும், வாகனத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதைத்தொடர்ந்து அழகிய மண்டபம் பகுதியில் அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர். அப்போது பயணிகள் ஆட்டோ ஒன்றை டிரைவர் நிறுத்தி விட்டு ஓடி விட்டார். அதில் சோதனை செய்த போது 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. அந்த அரிசியையும் ஆட்டோ டிரைவர் கேரளாவுக்கு கடத்த முயன்றுள்ளார். அந்த அரிசியும், ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.
அதிகாரிகள் பறிமுதல் செய்த 3½ டன் ரேஷன் அரிசியை உடையார்விளை அரிசி கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். வாகனங்களை தக்கலையிலுள்ள வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு கொண்டுவந்தனர்.
அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பறிமுதல் செய்த ரேஷன் அரிசியானது வீடுகளில் இருந்து குறைந்த விலை கொடுத்து வாங்கியது என்பதும் தெரிய வந்தது.