தமிழகத்தின் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு


தமிழகத்தின் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 17 May 2024 12:29 AM GMT (Updated: 17 May 2024 12:37 AM GMT)

தமிழகத்தில் கோடை மழை பெய்து சற்று குளிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

சென்னை,

தமிழகத்தில் கோடை வெயில் தொடங்கிய காலம் முதல் வெயில் சுட்டெரித்து வந்தது. வெயில் காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டமும் குறைவாக காணப்பட்டது. மக்களும் வீடுகளில் முடங்கினர்.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தபோதும் தென்மாவட்டங்களில் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த ஒரு வாரமாகவே கோடை மழை பெய்து சற்று குளிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த மழை நேற்று பரவலாக மாநிலம் முழுவதும் பெய்து குளிர்வித்தது.

அதன் தொடர்ச்சியாக வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கான வாய்ப்பும் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

அந்த வகையில், இன்று தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல், காற்றுடன் மிதமான மழையும், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

நாளை (சனிக்கிழமை) தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், கன்னியாகுமரி, தேனி, தென்காசி, நெல்லை, கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், தேனி, திண்டுக்கல், கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மதுரை, விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story