சதுரகிரியில் கொட்டிய கனமழை


சதுரகிரியில் கொட்டிய கனமழை
x

சதுரகிரியில் நேற்று திடீரென கன மழை கொட்டியது. இதனால் மலை ஏறி கோவிலுக்கு சென்ற 2 ஆயிரம் பக்தர்கள் அங்கு தவிப்புக்கு உள்ளாகினர்.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

சதுரகிரியில் நேற்று திடீரென கன மழை கொட்டியது. இதனால் மலை ஏறி கோவிலுக்கு சென்ற 2 ஆயிரம் பக்தர்கள் அங்கு தவிப்புக்கு உள்ளாகினர்.

பலத்த மழை

ஆடி அமாவாசையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலை அடிவாரத்தில் குவிந்தனர். நேற்று காைல முதல் மலையேறி சாமி தரிசனம் செய்தனர். பெரும்பாலான பக்தர்கள் கீழே இறங்கி வந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. சதுரகிரி மலை அடிவாரம் பகுதி முழுவதும் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது.

இதேபோல மலை மேல் சுந்தரமகாலிங்கம் கோவில் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் பக்தர்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

மலையில் இருந்து அடிவாரத்திற்கு இறங்கி வந்த பக்தர்கள் நடுவழியில் பலத்த மழையில் நனைந்தபடி ஒதுங்குவதற்கு கூட இடம் இன்றி தவித்தனர். பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானவர்கள் மழையில் நனைந்தபடியே அடிவாரத்தை நோக்கி ஓடிவந்தனர்.

போலீசார் பாதுகாப்பு

ஆங்காங்கே ஓடை பகுதியில் ஏற்கனவே வனத்துறையினரும், தீயணைப்பு துறையினரும், போலீசாரும் பாதுகாப்பு உபகரணங்களுடன் நிறுத்தப்பட்டு இருந்தனர். அவர்கள் மழையில் நனைந்தபடி வந்த பக்தர்களை பாதுகாப்புடன் அடிவாரத்திற்கு அனுப்பி வைத்தனர். நீர்வரத்து அதிகாி்த்ததால் ஓடை பகுதியில் கயிறுகள் கட்டப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன.

பக்தர்களை நீரோடை பகுதிகளில் இருந்து பாதுகாப்பாக தாணிப்பாறை அடிவாரத்துக்கு போலீசார், தீயணைப்பு படையினர் அனுப்பி வைத்தனர்.

உரிய வசதி

மேலும் மழை காரணமாக மலை உச்சியில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதுகாப்பாக கோவில் வளாக மண்டப பகுதியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இருந்தாலும் இரவில் கடும் மழை பெய்தால் என்ன செய்வது? என பக்தர்கள் பரிதவிப்புக்கு உள்ளாகினர்.

இன்று (வியாழக்கிழமை) ஆடி அமாவாசை தரிசனத்திற்கு பக்தர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்பு தான் அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு பக்தர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மலையில் தங்க வைக்கப்பட்டு உள்ள பக்தர்கள் இறங்குவதற்கு உண்டான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story