கனமழை எதிரொலி; 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை


கனமழை எதிரொலி; 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
x
தினத்தந்தி 3 Nov 2023 2:15 PM GMT (Updated: 3 Nov 2023 2:48 PM GMT)

நெல்லையில் கனமழை எதிரொலியாக பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தவும் அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது.

நெல்லை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால், பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் வருகிற 6-ந்தேதி வரை கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில் நாளை தமிழகத்தின் சில மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் தமிழகத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகங்கள் உரிய முன்னேற்பாடுகளை செய்வதற்காக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

கன்னியாகுமரியில் நாளை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. கனமழை எச்சரிக்கை எதிரொலியாக கன்னியாகுமரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் என அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை விடப்படுகிறது என்று கன்னியாகுமரி மாவட்ட கல்வி அதிகாரி அறிவித்துள்ளார்.

கனமழை எதிரொலியாக நெல்லையிலும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் அறிவித்து உள்ளார். இதேபோன்று, பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தவும் அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தென்காசி மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.


Next Story