கொட்டித்தீர்த்த கனமழை


கொட்டித்தீர்த்த கனமழை
x
தினத்தந்தி 12 Oct 2022 6:45 PM GMT (Updated: 12 Oct 2022 6:46 PM GMT)

கிருஷ்ணகிரியில் நேற்று மாலை கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் நேற்று மாலை கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

கனமழை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. கடந்த 2 மாதங்களாக பெய்த மழையால் பெரும்பாலான ஏரிகள், குளம், குட்டைகள் நிரம்பின. இதனால் விவசாயிகள் விவசாயம் செய்ய ஆரம்பித்தனர். இந்த மழையால் நிலத்தடி நீர்மட்டம் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாயத்தை விட்டு மாற்று வேலைக்கு கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் திரும்பி வந்து விவசாயம் செய்கின்றனர்.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று அதிகாலை இடியுடன் கனமழை பெய்தது. பின்னர் மாலையிலும் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நகரில் சில இடங்களில் தண்ணீர் செல்ல கால்வாய் வசதி இல்லாததால் மழைநீர் சாலைகளில் தேங்கி நின்றது. இந்த மழையால் காய்கறி வியாபாரிகள், பள்ளி மாணவ-மாணவிகள் சிரமத்திற்கு உள்ளனார்கள்.

184.1 மி.மீ. மழைபதிவு

இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- கிருஷ்ணகிரி-59.7, அஞ்செட்டி-32, ராயக்கோட்டை-27, ஊத்தங்கரை-15.2, பாரூர்-14.2, தேன்கனிக்கோட்டை-12, போச்சம்பள்ளி-9.8, பெனுகொண்டாபுரம்-7.2, சூளகிரி-7. மாவட்டத்தில் மொத்தம் 184.1 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.

இந்தநிலையில் கிருஷ்ணகிரி அணையின் மொத்த உயரமான 52 அடியில், தற்போது 50.15 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,185 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1,001 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதேபோல், ஓசூர் கெலவரப்பள்ளி அணையின் மொத்த உயரமான 44.28 அடியில் தற்போது 40.51 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 908 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 908 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.


Next Story