வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது தருவதில் தான் இருக்கிறது


வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது தருவதில் தான் இருக்கிறது
x

வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது தருவதில் தான் இருக்கிறது

தஞ்சாவூர்

வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது தருவதில் தான் இருக்கிறது என பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா பேசினார்.

மாணவர்களுக்கு ஓவியப்போட்டி

தஞ்சை அரண்மனை வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் புத்தகத் திருவிழா நேற்றுமுன்தினம் தொடங்கியது. 2-வது நாளான நேற்றுகாலை முத்தமிழ் போற்றும் சிலம்பு என்ற தலைப்பில் இலக்கிய அரங்கம் நடைபெற்றது. இதற்கு சரசுவதிமகால் நூலகம் மற்றும் ஆய்வு மைய தமிழ் பண்டிதர் மணி.மாறன் முன்னிலை வகித்தார். இதில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி தமிழ்த்துறை இணை பேராசிரியை ஜோதிலட்சுமி கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையே ஓவியப்போட்டி நடந்தது. இதில் 300 பேர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பல்வேறு விதமான ஓவியங்களை வரைந்தனர். மாலையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும், தென்னகப்பண்பாட்டு மையம் சார்பில் கிராமிய கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

பட்டிமன்றம்

இதையடுத்து நகைச்சுவை-சிந்தனை அரங்கம் நடந்தது. இதற்கு மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) விஜயலட்சுமி வரவேற்றார். தொடர்ந்து வாழ்க்கையில் மகிழ்ச்சி தருவதிலா அல்லது பெறுவதிலா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. பேச்சாளர்கள் ரேவதிசுப்புலட்சுமி, சமிதா, கவிதா ஜவகர் ஆகியோர் வாழ்க்கையில் மகிழ்ச்சி தருவதிலேயே என்று பேசினர். பேச்சாளர்கள் ராஜா, ராஜ்குமார், சேஷாத்திரி ஆகியோர் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெறுவதிலேயே என்று பேசினர்.

பட்டிமன்ற நடுவராக இருந்த பேராசிரியர் சாலமன்பாப்பையா பேசியதாவது:-

புத்தகத் திருவிழா தமிழகத்தில் ஒவ்வொரு நகரங்களிலும் மட்டுமின்றி சிற்றூர்களிலும் நடக்கிறது. திருவிழா என்றால் தேர் ஓடும். சாமி வரும். அது கும்பிட வேண்டியது. இதுவும் (புத்தகத் திருவிழா) கும்பிட வேண்டியது தான். மகாபாரதம், ராமாயணம் போன்ற புராணங்களை ஆழமாக படிக்க வேண்டும். படிக்கக்கூடாது என்று கூறுபவர்கள் கல்விக்கு பகையானவர். ஏராளமான அறிஞர்கள் புத்தகத்திற்குள் புதைந்து கிடக்கிறார்கள். இலக்கியம் உள்ளிட்ட ஏராளமான நூல்கள் இங்கே உள்ளன. அதை படிக்க வேண்டும்.

தருவதில் தான் மகிழ்ச்சி

உங்களுக்கு என்ன தேவையோ, எதை தெரிந்து கொள்ள வேண்டுமோ அந்த புத்தகத்தை வாங்கி படிக்க வேண்டும். சம்பாத்தியத்தில் 2 முதல் 5 சதவீதத்தை மிச்சப்படுத்தி, புத்தகங்கள் வாங்க வேண்டும். நீங்கள் படித்தால் உங்கள் குழந்தைகள் அறிவாளியாக பிறப்பார்கள். அறிவை பெற்றோர்கள் நமக்கு கொடுத்துள்ளனர். அந்த அறிவை வளர்க்க வேண்டும். அதற்காக அறிவு கோவிலுக்கு (புத்தகத் திருவிழா) வர வேண்டும். அடுத்த தலைமுறை தமிழ் படித்தால் தான் தமிழ் தழைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகுவது எப்போது?.

தருவதில் தான் மகிழ்ச்சி என்றும், பெறுவதில் தான் மகிழ்ச்சி என்றும் இங்கே சொன்னார்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது தருவதில் தான் இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார். முடிவில் சுற்றுலா அலுவலர் நெல்சன் நன்றி கூறினார்.


Next Story