குறைதீர்க்கும் நாள் கூட்டம்: வாய்க்கால்களை தூர்வார விவசாயிகள் கோரிக்கை


குறைதீர்க்கும் நாள் கூட்டம்: வாய்க்கால்களை தூர்வார விவசாயிகள் கோரிக்கை
x

கரூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வாய்க்கால்களை தூர்வார விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர்

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து 124 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. தொடர்ந்து 10 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்து 657 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில், பூனம்பட்டி பகுதியில் விவசாயிகளின் நிலத்தில் தென்னைக்குருத்தில் பூச்சி பரவலை மருந்துகள் மூலம் அழிக்க வேண்டும் தென்னிலை பகுதியில் கால்நடை சந்தைக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும், விவசாய நிலத்திற்கு செல்லும் பகுதியில் தார்ச்சாலை அமைத்து தர வேண்டும்,

கிருஷ்ணராயபுரம் பகுதிக்குட்பட்ட ஆதி திராவிடர் காலனி பகுதியில் சாக்கடை பணிகள் பாதியில் நிற்பதை முழுமையாக சீர்செய்து முடித்து கொடுக்க வேண்டும், கள்ளப்பள்ளி, சித்தளம்பாடி சமத்துவ மயானத்திற்கு சிமெண்டு சாலை அமைக்க வேண்டும், கள்ளப்பள்ளி கிராமத்தில் நீர்நிலை தொட்டி நீண்ட காலமாக பயன்பாட்டிற்கு வராமல் உள்ளதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வேண்டும்.

வாய்க்கால் தூர்வாரி கொடுக்க வேண்டும்

பில்லாப்பாளையம் பகுதியில் பல ஆண்டுகாலமாக விவசாய நிலத்திற்கு செல்லும் வாய்க்கால் தூர்வாரப்படாமல் உள்ளதை தூர்வாரி கொடுக்க வேண்டும். கருங்களப்பள்ளி கிராமத்தில் விவசாய நிலத்தில் மழையால் வாழை மரம் சாய்ந்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். குருங்கல்பள்ளி பகுதியில் காவிரி கூட்டு நீர் தினமும் வழங்க ஏற்பாடு செய்து தர வேண்டும்.

தோட்டக்குறிச்சி முதல் நெரூர் பகுதியில் தமிழ்நாடு காகித ஆலை கழிவு நீர் குடிநீருடன் கலப்பதை தடுக்க வேண்டும். வீரராக்கியம் பகுதியில் விவசாயம் பகுதியில் வாய்க்கால்களை தூர்வாரி கொடுக்க வேண்டும். ஈசநத்தம் பகுதியில் விவசாய நிலங்களில் வரப்பு திருத்தம் செய்து தர வேண்டும். தென்னிலைப் பகுதியில் மின் கோபுர விளக்கு அமைத்து தர வேண்டும். அதே பகுதியில் உழவர் சந்தைக்கு வியாபாரிகள் செல்வதற்கு ஏதுவாக

அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள்

புணவாசிப்பட்டி கிராமத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் விவசாய பணி மேற்கொள்ள வேண்டும், நஞ்சனூர் பகுதியில் ரேஷன் கடையில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும், தோகைமலை பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் பொது மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும், வடசேரி கிராம பகுதியில் ட்ரோன் தொழில்நுட்பம் வசதியுடன் விவசாயம் செய்வதற்கு மருந்து தெளிப்பான் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்,

வளையல்காரன் புதூரில் நீர்வழிப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், மாயனூர் வார சந்தையில் வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதற்கு அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்க வேண்டும், மாயனூர் பகுதியில் நிலம் கையகப்படுத்தியதில் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன்கள் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் பேசினர்.

குடகனாறு பிரச்சினை

கூட்டத்தில் குடகனாறு பாதுகாப்பு சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் செல்வராஜ் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-குடகனாறு பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது. திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், லட்சக்கணக்கான பொதுமக்களின் வாழ்வாதார பிரச்சினை ஆகும்.

குடகனாறு பிரச்சினையை தீர்க்க தமிழக அரசால் வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. அதன் அறிக்கையை இதுவரை வெளியிடவில்லை. இதுவரை இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விவசாயிகள் பொதுமக்களின் வாழ்வாதாரமான குடகனாறு பிரச்சினையை தீர்க்கக்கோரி தமிழக முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி வலியுறுத்த அனுமதி பெற்று தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story