நாமக்கல்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 229 மனுக்கள் குவிந்தனஇலவச வீட்டுமனை பட்டாவை கலெக்டர் வழங்கினார்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மொத்தம் 229 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கினர்.
இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட அவர் உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கடந்த வாரம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா வேண்டி விண்ணப்பித்த திருச்செங்கோடு தாலுகா ராமாபுரம் கிராமத்தை சேர்ந்த சிதம்பரம் என்பவரது மனுவினை பரிசீலனை செய்து நடவடிக்கை மேற்கொண்டதன் அடிப்படையில் அவருக்கு இலவச வீட்டுமனை பட்டாவை கலெக்டர் வழங்கினார்.
மேலும் கலெக்டர் அலுவலக தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று துறை அலுவலரிடம் வழங்கி அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுலவர் மணிமேகலை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.