அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம்


அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம்
x

பில்லூரில் உள்ள அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம் நடைபெற்றது.

விழுப்புரம்

விழுப்புரம் அருகே பில்லூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நாக அங்காள பரமேஸ்வரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் மயானக்கொள்ளை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. அதுபோல் இந்த ஆண்டுக்கான மயானக்கொள்ளை உற்சவம் கடந்த 16-ந் தேதி காலை கொடியேற்றம், காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், கஞ்சி கலய ஊர்வலமும், இரவில் சாமி வீதியுலாவும் நடந்தது.

இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான மயானக்கொள்ளை உற்சவம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி காலை 10 மணிக்கு அக்னி கரகம் புறப்பட்டது. மாலை 3.30 மணிக்கு கோவிலில் இருந்து அம்மன் ஊர்வலமாக மயானம் புறப்பாடு நடந்தது.அப்போது பக்தர்கள், குடல் மாலை அணிந்தும், காளி போன்ற வேடமணிந்தும் மயானத்திற்கு சென்றனர். அங்கு விவசாய விளைபொருட்களை வாரி இறைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் இரவு 7 மணிக்கு பாவாடைராயன் சாமிக்கு கும்பம் படைத்தலும், அன்னதானமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story