ரம்ஜான் பண்டிகை தமிழகம் முழுவதும் ரூ.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை


ரம்ஜான் பண்டிகை தமிழகம் முழுவதும் ரூ.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை
x

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ரூ.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆனது.

மதுரை,

ரம்ஜான் பண்டிகை இன்று (சனிக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடந்த சில நாட்களாக தமிழகத்தில் உள்ள சந்தைகளில் ஆடுகளின் விற்பனை அமோகமாக நடைபெற்று வந்தது.

ரம்ஜான் பண்டிகையையொட்டி நேற்று மாநிலம் முழுவதும் வாரச்சந்தைகளில் அதிகளவில் ஆடுகள் விற்பனை ஆகின. சந்தைகளில் ஆட்டு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் திரண்டு ஆடுகளை போட்டிப்போட்டு வாங்கிச் சென்றனர்.

ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையிலும் ஆடுகள் விலை போயின.

ரூ.50 கோடிக்கு...

மதுரை மாவட்டம் திருமங்கலம் சந்தைப்பேட்டை ஆட்டுச்சந்தையில் நேற்று ரூ.7 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக கூறப்படுகிறது. அங்கு ஆடுகள் வாங்க அதிகளவில் வியாபாரிகளும், பொதுமக்களும் திரண்டதால் சந்தை வளாகமே களை கட்டி காணப்பட்டது. கடலூர் மாவட்டம் வேப்பூரில் நடந்த வாரச்சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி சந்தையில் ரூ.3 கோடிக்கும், புதுக்கோட்டை வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கும், ராணிப்பேட்டை வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கும் ஆடுகள் விற்பனையாகின.

இதேபோல தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகையையொட்டி ரூ.50 கோடி வரையில் ஆடுகள் விற்பனை ஆனது.


Next Story