அண்ணாமலை படத்தோடு ஆடு பலியிட்ட விவகாரம்: போலீஸ் தரப்பு விளக்கம்


அண்ணாமலை படத்தோடு ஆடு பலியிட்ட விவகாரம்: போலீஸ் தரப்பு விளக்கம்
x

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை படத்துடன் ஆட்டை பலியிட்ட விவகாரத்தில் போலீஸ் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்ததை அடுத்து, சிலர் ஆட்டுக்கு அவரது போட்டோவை அணிவித்து நடுரோட்டில் அதன் தலையை வெட்டி கொண்டாடினர்.

இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் ஏற்காடு மோகன்தாஸ், சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து நடந்த வழக்கு விசாரணையின்போது, "இது போன்ற விஷயங்களை ஏற்க முடியாது" என தெரிவித்து போலீசார் எடுத்த நடவடிக்கை குறித்து பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை படத்துடன் ஆட்டை பலியிட்ட விவகாரத்தில் போலீஸ் தரப்பு விளக்கம் இன்று அளித்துள்ளது. இதன்படி காவேரிப்பட்டணம் காவல் நிலையத்தில் முதல் கட்டமாக மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தங்கதுரை விளக்க அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.



Next Story