மாணவிகள் நன்கு படித்து காவல்துறையில் சேரவேண்டும்


மாணவிகள் நன்கு படித்து காவல்துறையில் சேரவேண்டும்
x
தினத்தந்தி 12 July 2023 6:45 PM GMT (Updated: 12 July 2023 6:46 PM GMT)

மாணவிகள் நன்கு படித்து காவல்துறையில் சேரவேண்டும் என திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

தமிழக அரசின் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கான இமைகள் திட்டத்தின் கீழ் திருக்கோவிலூர் அரசு அங்கவை சங்கவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த சுமார் 50 மாணவிகள் நேற்று முன்தினம் திருக்கோவிலூர் போலீஸ் நிலையம் வரவழைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு போலீஸ் நிலையத்தில் நடைபெறும் அன்றாட பணிகள் குறித்து போலீசார் விளக்கி கூறினர். அப்போது ஒரு மாணவி தான் போலீசாக விரும்புவதாக தெரிவித்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் இருக்கையில், அந்த மாணவியை போலீசார் அமர வைத்து தொப்பி அணிவித்து ஊக்கப்படுத்தினர். அதனை தொடர்ந்து திருக்கோவிலூர் சந்தைப்பேட்டையில் உள்ள துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்ட மாணவிகளை துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார் இனிப்பு கொடுத்து வரவேற்றார். அப்போது அவர், மாணவிகளிடம், பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்தால், அது குறித்த தகவலை 1098 மற்றும் 181 ஆகிய தொலைபேசி எண்கள் மூலம் புகார் தெரிவிக்கலாம் என்றார். மேலும் மாணவிகளான நீங்கள் அனைவரும் நன்கு படித்து காவல்துறையில் சேர்ந்து மக்களுக்காக பணியாற்ற வேண்டும். அதற்கு முன் சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் மற்றும் தொந்தரவுகள் குறித்து தைரியமாக எதிர்கொள்ளும் மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு காவல் நிலையத்தில் வந்து புகார் கொடுக்கும் மனநிலை வர வேண்டும். அப்போதுதான் பெண்களுக்கு எதிராக செயல்படும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். அப்போதுதான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைய தொடங்கும். இதன் மூலம் ஆண்களுக்கு நிகராக பெண்களும் சம பாதுகாப்புடன் சுதந்திரமாக இந்த சமுதாயத்தில் வாழ முடியும் என்றார். இந்த நிகழ்ச்சியில் திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story