குளங்களில் கொட்டப்படும் குப்பைகள்


குளங்களில் கொட்டப்படும் குப்பைகள்
x

கூத்தாநல்லூர் அருகே குளங்களில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே குளங்களில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

குளங்கள்

கூத்தாநல்லூர் அருகே உள்ள பொதக்குடியில் வெட்டுக்கேணி குளம், அய்யாக்கேணி குளம், ராமன்கேணி குளம், சத்தரத்தடி குளம் போன்ற பெயர்களை கொண்ட குளங்கள் உள்ளன. இந்த குளங்களில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, ஆற்றில் இருந்து வரும் தண்ணீரை தேக்கி வைத்து அப்பகுதி மக்கள் குளிப்பதற்கும், ஆடைகள் துவைப்பதற்கும் பயன்படுத்தி வந்தனர்.

நாளடைவில் மேற்கண்ட குளங்கள் போதிய அளவில் பராமரிக்கப்படாததால், குளங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் இங்குள்ள குளங்கள் சிலவற்றில் ஆற்றில் இருந்து வரும் தண்ணீரை நிரப்பி வைக்கப்படுவது இல்லை.

அதிகளவில் குப்பைகள்

இதனால் எல்லா காலங்களிலும் குளம் தண்ணீர் இல்லாமல் வறண்ட நிலையிலேயே காணப்படுகிறது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக குளங்களில் அதிகளவில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால், குளம் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் விஷப்பூச்சிகள் மற்றும் கொசு உற்பத்தி அதிகரிக்கிறது.

இதனால், சுகாதார கேடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இத்தகைய குளங்களை சுற்றிலும் வீடுகள் அதிகளவில் உள்ளதால் கொசுக்கடி மற்றும் துர்நாற்றத்தால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.மேலும், குளங்களில் அதிகளவில் குப்பைகளை கொட்டப்படுவதால், குளங்கள் மேடான பகுதியாக மாறி, குளம் இருக்கும் இடம் தெரியாமலேயே மறைந்து போய் விடும் வாய்ப்பு உள்ளது.

சீரமைக்க எதிர்பார்ப்பு

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தின் கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, குப்பைகளை கொட்டாமல் தடுத்து குளங்களை தூர்வாரி சீரமைப்பு செய்து தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


Next Story