கள்ளச்சாராயம் விற்றால் குண்டர் சட்டம் பாயும்


கள்ளச்சாராயம் விற்றால் குண்டர் சட்டம் பாயும்
x
தினத்தந்தி 20 May 2023 7:45 PM GMT (Updated: 20 May 2023 7:45 PM GMT)

கள்ளச்சாராய விற்றால் குண்டர் சட்டம் பாயும் என்று விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

நீலகிரி

ஊட்டி

கள்ளச்சாராய விற்றால் குண்டர் சட்டம் பாயும் என்று விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

கள்ளச்சாராய உயிரிழப்பு

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சமீபத்தில் கள்ளச்சாராயம் குடித்த 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க டி.ஜி.பி. உத்தரவின்பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் அறிவுரையின்பேரில் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

விழிப்புணர்வு நோட்டீஸ்

அதன்படி ஊட்டி பஸ் நிலையம், மார்க்கெட், குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகம் செய்து வருகின்றனர்.

மேலும் நீலகிரி மாவட்ட எல்லைக்குள் கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கடத்துதல், விற்பனை செய்தல், போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்தல், எரி சாராயம் கடத்துதல் மற்றும் போதை வஸ்துகள் கடத்தி விற்பனை செய்தல் போன்ற குற்றங்கள் பற்றிய தகவலை 9489380581 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்று பொதுமக்களிடம் போலீசார் அறிவுறுத்தினர்.

அதே சமயத்தில் கள்ளச்சாராய விற்பனையில் யாரேனும் ஈடுபட்டால் உடனடியாக குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story