விநாயகர் சிலைகள் 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது என்று அறிவுறுத்தல்


விநாயகர் சிலைகள் 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது என்று அறிவுறுத்தல்
x

விநாயகர் சிலைகள் 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, விழா ஒருங்கிணைப்பாளர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ரமணசரஸ்வதி தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், விநாயகர் சிலையானது முற்றிலும் களிமண்ணால் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும். வண்ணப்பூச்சுகள் முற்றிலும் இயற்கையான வகையிலும், நீரில் கரையக்கூடியதாகவும் இருக்க வேண்டும். சிலையின் மொத்த உயரமானது அடிப்பகுதியில் இருந்து மொத்தம் 10 அடிக்கு மேலாக இருக்கக்கூடாது.

சிலையை நிறுவுவதற்கு தேர்வு செய்யப்பட்ட இடமானது இதர மதச்சார்புடைய பகுதியாகவும், மருத்துவமனை பகுதியாகவும், கல்விக்கூடங்கள் அமைந்துள்ள பகுதியாகவும் இருக்கக்கூடாது. விழா அமைப்பினர் பொது அமைதி, பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு மற்றும் மதநல்லிணக்கம் சார்ந்த நேர்வுகளில் அவ்வப்போது வருவாய்த்துறை, போலீசார், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் விதிக்கும் இதர நிபந்தனைகளுக்கும் கட்டுப்பட வேண்டும். விநாயகர் சிலைகள் ஊர்வலமானது மதியம் 12 மணிக்கு முன்னதாக புறப்பட்டு போலீசாரால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒப்புகை பெற்ற வழித்தடங்கள் வழியாக, சிலை கரைப்பதற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்திற்கு உரிய வாகனத்தின் மூலமாக செல்ல வேண்டும். சிலை எடுத்து செல்லும் வாகனத்தில் நிர்ணயித்த எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே பயணிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கக்கூடாது. 2019-ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகள் வைக்க அனுமதிக்கப்படும், என்றார்.

இதில் கோட்டாட்சியர்கள் ராமகிருஷ்ணன் (அரியலூர்), பரிமளம் (உடையார்பாளையம்) மற்றும் தாசில்தார்கள், போலீசார், விழா ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story