வடமாநில வியாபாரி தயாரித்த விநாயகர் சிலைகளை விற்பனை செய்யலாம்; ஆற்றில் கரைக்க தடை- வேதிப்பொருள் கலந்திருப்பதால் மதுரை ஐகோர்ட்டு நடவடிக்கை


வடமாநில வியாபாரி தயாரித்த விநாயகர் சிலைகளை விற்பனை செய்யலாம்; ஆற்றில் கரைக்க தடை- வேதிப்பொருள் கலந்திருப்பதால் மதுரை ஐகோர்ட்டு நடவடிக்கை
x

வடமாநிலத்தை சேர்ந்த வியாபாரி வேதிப்பொருள் கலந்து தயாரித்த விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய அனுமதி அளித்தும், அந்த சிலைகளை ஆற்றில் கரைப்பதற்கு தடை விதித்தும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


வடமாநிலத்தை சேர்ந்த வியாபாரி வேதிப்பொருள் கலந்து தயாரித்த விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய அனுமதி அளித்தும், அந்த சிலைகளை ஆற்றில் கரைப்பதற்கு தடை விதித்தும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

விநாயகர் சிலை

நெல்லை பாளையங்கோட்டையில் குடியிருந்து வரும் பிரகாஷ் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நான், குடும்பத்தோடு கடந்த 10 வருடங்களுக்கு முன் தமிழகம் வந்து குடியேறினேன். இதற்காக பாளையங்கோட்டை பகுதியில் குடிசை போட்டு தங்கி பல்வேறு சிலைகளை செய்து விற்பனை செய்கிறேன்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் விநாயகர் சிலைகளை களிமண் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ண பொடிகள் கொண்டு தயாரித்து விற்பனை செய்கிறேன். அதன்படி, இந்த வருடமும் ரூ.21 லட்சம் கடனாக பெற்று கடந்த சில மாதங்களாக விநாயகர் சிலைகளை செய்து வருகிறேன்.

இந்த நிலையில், போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் திடீரென்று சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வேதிப்பொருட்கள் அதிக அளவு கலந்துள்ளதாக கூறி சிலைகள் விற்பனையை தடுத்து வருகின்றனர். அரசு அனுமதித்துள்ள வரம்புக்குள் மட்டுமே வேதிப்பொருட்களை பயன்படுத்தி சிலைகளை தயாரித்து வருகிறேன். ஏற்கனவே முன்பணம் கொடுத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு சிலைகளை தயாரித்து கொடுக்க வேண்டியுள்ளது. எனவே, இந்த வழக்கை அவசர வழக்காக ஏற்று ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள விநாயகர் சிலைகளை மட்டும் விற்பனை செய்ய அனுமதித்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆற்றில் கரைக்க அனுமதி கிடையாது

இந்த மனு நேற்று அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளை மீறி சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளதால், அதன் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அரசுத்தரப்பு குற்றவியல் வக்கீல் மாதவன் வாதிட்டார்.

விசாரணை முடிவில், தாமிரபரணி ஆறு ஏற்கனவே மாசு அடைந்துள்ளது. பிளாஸ்டர் ஆப் பாரிஸ் எனப்படும் வேதிப்பொருள் கலந்து செய்த இந்த சிலைகளை கண்டிப்பாக அனுமதிக்க முடியாது. சட்டம் தெளிவாக உள்ளதால் வேதிப்பொருள் வண்ணங்களை அனுமதிக்க முடியாது. ஆனால், வழிபாட்டுக்கு விற்பனை செய்வதை தடுக்க முடியாது. மனுதாரரிடம் சிலையை வாங்குபவர்கள் அந்த சிலையை ஆற்றில் கரைக்க மாட்டோம் என்று உறுதிமொழி கொடுக்க வேண்டும்.

அவர்களின் முழு முகவரி மற்றும் விவரங்களை போலீசார் பெறுவதுடன், உறுதிமொழி பத்திரத்திலும் கையெழுத்து பெற வேண்டும். இந்த சிலைகளை வீட்டில் வைத்து வழிபட மட்டும் அனுமதிக்கப்படுகிறது. ஆற்றில் கரைக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதனை மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் முழுமையாக கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.


Next Story