வைகை ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு


வைகை ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு
x

வைகை ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

மதுரை


விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, மதுரை மாநகரில் இந்து மக்கள் கட்சி சார்பாக பல்வேறு இடங்களில் 3 அடி முதல் 10 அடி உயரம் வரை விநாயகர் சிலை வைத்து வழிபட்டனர். 2-ம் நாளான நேற்று அந்த சிலைகளை கரைக்க முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து 25 பெரிய சிலைகள் மற்றும் ஒரு அடி உயரம் கொண்ட 108-க் கும் மேற்பட்ட சிறிய விநாயகர் சிலைகள் நேற்று மாலை கீழமாசி வீதி விளக்குதூண் மொட்டை விநாயகர் கோவில் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு சிலைகளுக்கு சிறப்பு பூஜை செய்து ஊர்வலமாக மாசி வீதியில் வலம் வந்தது. அதில் சிறிய சிலைகளை 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கொண்டு வந்தனர்.

இதையொட்டி போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் மாசி வீதிகள், வெளிவீதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் சிலைகள் அனைத்தும் சிம்மக்கல் வழியாக வைகை ஆற்றின் தென்கரை பகுதிக்கு வந்தடைந்தன. அங்கு சிலைகள் அனைத்தும் பாதுகாப்பாக வைகை ஆற்றில் கரைக்கப்பட்டு பக்தர்கள் வழிபாடு நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இலங்கை யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன்ஜீ, இலங்கை மட்டகளப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன், இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலை கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலூரில் இந்துமகா சபா சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.பின்னர் விநாயகர் சிலைகள் நீர்நிலையில் கரைக்கப்பட்டன.

எழுமலை மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 23 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக முக்கிய வீதிகளின் வழியாக சென்று எழுமலை பெரியகுளம் கண்மாயில் கரைக்கப்பட்டது..இதற்கான ஏற்பாடுகளை ஓ.பி.சி. மாவட்ட துணைத்தலைவர் மாத்தூர், இந்து முன்னணி நிர்வாகிகள் சேடப்பட்டி ஒன்றிய தலைவர் லட்சுமணன், மாவட்ட துணைத்தலைவர் சுந்தரமூர்த்தி, ஒன்றிய பொருளாளர் வெங்கடேசன், பா.ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளர் உதயச்சந்திரன், வக்கீல் பிரிவு மாவட்ட துணைத்தலைவர் அருள் ஆனந்த் ஆகியோர் செய்து இருந்தனர்.


Next Story