ஆந்திராவில் இருந்து ராமநாதபுரத்திற்கு கொண்டுவரப்பட்ட விநாயகர் சிலைகள்


ஆந்திராவில் இருந்து ராமநாதபுரத்திற்கு கொண்டுவரப்பட்ட விநாயகர் சிலைகள்
x
தினத்தந்தி 23 Aug 2023 6:45 PM GMT (Updated: 23 Aug 2023 6:46 PM GMT)

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்வதற்காக ஆந்திராவில் இருந்து ராமநாதபுரத்திற்கு 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கொண்டுவரப்பட்டன.

ராமநாதபுரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்வதற்காக ஆந்திராவில் இருந்து ராமநாதபுரத்திற்கு 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கொண்டுவரப்பட்டன.

விநாயகர் சதுர்த்தி

நாடு முழுவதும் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும். தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வருகின்ற செப்டம்பர் மாதம் 19-ந் தேதி கொண்டாடப்படுகின்றது. இதனிடையே விநாயகர் சதுர்த்தியன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏராளமான இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து பூஜை செய்யப்படும். அதன்படி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆந்திராவில் செய்யப்பட்ட 100-க்கும் அதிகமான விநாயகர் சிலைகள் ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரம் பகுதியில் உள்ள தனியார் கட்டிடம் ஒன்றில் பாதுகாப்பாக இறக்கி வைக்கப்பட்டுள்ளன.

லாரி மூலம் கொண்டுவரப்பட்டு இறக்கி வைக்கப்பட்ட சிலைகளை இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமையிலான இந்து முன்னணி நிர்வாகிகள் பார்வையிட்டனர். இது குறித்து இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி கூறும் போது, செப்டம்பர் மாதம் 19-ந் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று மாவட்டத்தில் 500 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட உள்ளன.

500 இடங்களில்

ராமநாதபுரத்தில் 40 இடங்களிலும், பரமக்குடியில் 50 இடங்களிலும், ராமேசுவரத்தில் 25 என மாவட்டம் முழுவதும் 500 இடங்களில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் செய்து பிரதிஷ்டை செய்து பூஜை செய்யப்பட உள்ளது. இவ்வாறு வைக்கப்படும் விநாயகர் சிலைகள் அந்தந்த ஊர்களில் உள்ள கடல் மற்றும் நீர்நிலை, ஊருணிகளிலும் ஊர்வலமாக கொண்டு சென்று கரைக்கப்படும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்இந்த முறை ஆந்திராவில் இருந்து காகித கூழ், மரத்தூள் உள்ளிட்டவைகளால் செய்யப்பட்ட 150 சிலைகள் இதுவரை கொண்டுவரப்பட்டுள்ளன.

மீதமுள்ள சிலைகள் இன்னும் ஓரிரு வாரங்களில் கொண்டுவரப்படும். அனைத்து சிலைகளும் ரெகுநாதபுரத்தில் உள்ள இடம் ஒன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

விநாயகர் சதுர்த்திக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக சிலைகள் அந்தந்த ஊர்களுக்கு வாகனம் மூலம் ஏற்றி அனுப்பி வைக்கப்படும். 3 அடி முதல் 9 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. சிம்ம வாகனம், அன்ன வாகனம், யானை வாகனம், மான் வாகனம், மயில் வாகனம் உள்ளிட்ட பல வாகனங்களில் விநாயகர் அமர்ந்திருப்பது போன்ற சிலைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story