ஊராட்சி பகுதிகளில் வளர்ச்சி பணிகள் செய்ய நிதி ஒதுக்க வேண்டும்


ஊராட்சி பகுதிகளில் வளர்ச்சி பணிகள் செய்ய நிதி ஒதுக்க வேண்டும்
x

ஊராட்சி பகுதிகளில் வளர்ச்சி பணிகள் செய்ய நிதி ஒதுக்க வேண்டும் - திருப்பத்தூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் கோரிக்கை

திருப்பத்தூர்

திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழு தலைவர் விஜியா அருணாச்சலம் தலைமையில் நடைபெற்றது.

துணைத் தலைவர் டி.ஆர். ஞானசேகரன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் என்.சங்கர் வரவேற்றார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட ஒன்றிய குழு உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் செய்ய வேண்டிய பணிகள் மற்றும் குறைகள் குறித்து பேசினார்கள். துணைத்தலைவர் டி.ஆர்.ஞானசேகரன் (தி.மு.க.) பேசுகையில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து 34 கிராம ஊராட்சிகளுக்கு 20 ஆயிரம் மரக்கன்றுகள் வாங்க ரூ.2 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் மரக்கன்று வைக்கும் போது ஒன்றிய கவுன்சிலரை யாரும் அழைக்கவில்லை. அகரம் ஊராட்சியில் மழைவள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரை பாலத்தை மேம்பாலமாக கட்டவேண்டும் என்றார்.

டாக்டர் திருப்பதி (அ.தி.மு.க.), யுவராஜ் (அ.தி.மு.க.) அன்பு (அ.தி.மு.க.), மல்லிகா சந்திரசேகர் (தி.மு.க.), பிருந்தாவதி (தி.மு.க.) உள்ளிட்ட உறுப்பினர்கள் பேசினர்.

அனைத்து ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களும் ஊராட்சி பகுதிகளில் வளர்ச்சி பணிகள் செய்ய நிதி ஒதுக்கித்தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அதற்கு பதில் அளித்த தலைவர், தமிழக அரசு தற்போது அனைத்து ஊராட்சி ஒன்றியத்திற்கும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. நிதி வந்தவுடன் அனைத்து ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கும் நிதி வழங்கப்படும் என தெரிவித்தார்.

முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் மணவாளன் நன்றி கூறினார்.


Next Story