மயிலாடுதுறை நகர்மன்ற கூட்டத்தில் இருந்து தி.மு.க., ம.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு


மயிலாடுதுறை நகர்மன்ற கூட்டத்தில் இருந்து தி.மு.க., ம.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு
x

மயிலாடுதுறை நகர்மன்ற கூட்டத்தில் இருந்து தி.மு.க., ம.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு

மயிலாடுதுறை

மயிலாடுதுறை:

பாதாள சாக்கடை பராமரிப்பு பணி தீர்மானத்தை கண்டித்து மயிலாடுதுறை நகர்மன்ற கூட்டத்தில் இருந்து தி.மு.க., ம.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

நகர்மன்ற கூட்டம்

மயிலாடுதுறை நகர்மன்ற சாதாரண கூட்டம் அதன் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. ஆணையர் (பொறுப்பு) ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:-

ஆனந்தி (அ.தி.மு.க.): புளியந்தெரு பாதாள சாக்கடை பம்பிங் ஸ்டேஷன் எதிரில் ஆள்நுழைவுத்தொட்டி உடைந்து உள் வாங்கியுள்ளது. இதனை உடனே சீரமைக்க வேண்டும்.

செந்தில் (பா.ம.க.): நகரின் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை பழைய ெரயில்வே சாலையில் கொட்டி தீ வைக்கின்றனர். இதனால் புகைமூட்டம் சூழ்ந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

டெங்கு காய்ச்சல்

சுதா(தி.மு.க.): 28-வது வார்டில் பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையில் வழிந்து ஓடுகிறது. இதனை சரி செய்ய வேண்டும்.

ராமச்சந்திரன் (அ.தி.மு.க.): பட்டமங்கலம் வாய்க்காலில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. தனியார் பள்ளி முன்பு சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது.

வளர்மதி (தி.மு.க.): பாதாளசாக்கடை கழிவுநீர் வழிந்தோடி நடந்து செல்ல முடியாத அளவுக்கு மோசமாக உள்ளது.

சாலையை அடைத்து டாஸ்மாக் பார்

சர்வோதயன் (தி.மு.க.):பஜனைமட சாலையை அடைத்து டாஸ்மாக் பார் அமைக்கப்பட்டுள்ளது. அந்த தடுப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

சம்பத் (தி.மு.க.) : மாப்படுகை சாலை காவிரி பாலம் அருகில் இருந்த பழுதடைந்த கருமாதி மண்டபம் இடிக்கப்பட்டதால் சாலையில் அமர்ந்து சடங்குகள் செய்யும் அவலநிலை உள்ளது.

ரிஷிகுமார் (தி.மு.க.): திருவிழந்தூர் நாலுகால் மண்டபம் இடியும் நிலையில் உள்ளது. அதனை சீரமைக்க வேண்டும்.

சிவக்குமார் (துணைத் தலைவர்): மதுராநகர் மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் குடிநீர் பிரச்சினை அதிகமாக உள்ளது.

கல்யாணி ரகு (தி.மு.க.): ஆனந்ததாண்டவபுரம் சாலையில் பாதாள சாக்கடை மூடி உடைந்துள்ளது.

வெளிநடப்பு

கணேசன் (ம.தி.மு.க.): எனது வார்டில் பாதாள சாக்கடை கழிவுநீர் ஆங்காங்கே வழிந்து சாலைகளில் ஓடுகிறது. பாதாள சாக்கடை பராமரிப்பிற்கென்று மாதந்தோறும் ரூ 11 லட்சம் வழங்கப்பட்டும், அந்த பணி சரிவர நடைபெறவில்லை. தற்போது இந்தப்பணியை அதே ஒப்பந்ததாரருக்கு வழங்க கொண்டு வந்துள்ள தீர்மானத்தை எதிர்க்கிறேன் என்றார்.

பின்னர் இந்த தீர்மானத்தை கண்டித்து கணேசன் மற்றும் தி.மு.க. உறுப்பினர் கல்யாணிரகு ஆகிய இருவரும் வெளிநடப்பு செய்தனர்.

பசுமை தீர்ப்பாயம் நடவடிக்கை

மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பது மற்றும் ஆக்கிரமிப்புகள் தொடர்பாக விஜயகுமார் என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தியதற்காக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இழப்பீடாக ரூ.9 லட்சம் செலுத்த ஆணையிட்டது. அந்த இழப்பீட்டு தொகையை கட்டுவதற்கு நகராட்சியில் தீர்மானம் வைத்து ஒப்புதல் கோரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த உறுப்பினர்கள் இதற்கு அப்போதைய அதிகாரிகளும், பாதாள சாக்கடையை பராமரித்தவர்கள்தான் காரணம். அவர்களிடம் அந்த தொகையை பெற்று இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.


Next Story