நெல்லை சந்திப்பில் 19-ந் தேதி முதல் டவுன் பஸ்களை இயக்க நடவடிக்கை


நெல்லை சந்திப்பில் 19-ந் தேதி முதல் டவுன் பஸ்களை இயக்க நடவடிக்கை
x

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் நேற்று பஸ்கள் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. வருகிற 19-ந் தேதி முதல் டவுன் பஸ்களை முழுமையாக இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் நேற்று பஸ்கள் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. வருகிற 19-ந் தேதி முதல் டவுன் பஸ்களை முழுமையாக இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

சந்திப்பு பஸ் நிலையம்

நெல்லை மாநகரின் மையப்பகுதியில் 4.25 ஏக்கரில் அமைந்துள்ளது சந்திப்பு பெரியார் பஸ்நிலையம். இந்த பஸ் நிலையத்தை மேம்படுத்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.78.99 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து 2018-ம் ஆண்டு பழைய பஸ் நிலைய கட்டிடங்கள் அகற்றப்பட்டு, வாகன காப்பக வசதியுடன் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் அங்கு தரைகீழ் தளம் அமைக்க மண் அள்ளியது தொடர்பாக வழக்கு, உரிய அனுமதி பெறப்படாமல் கட்டியதாக எழுந்த பிரச்சினை போன்றவைகளால் 5 ஆண்டுகளாக இந்த பஸ் நிலையம் ஒரு பகுதி கட்டி முடிக்கப்பட்டும் திறக்கப்படாமல் கிடக்கிறது.

சோதனை ஓட்டம்

இந்த நிலையில் பஸ் நிலையத்தை முழுமையாக திறக்க காலதாமதம் ஆகும் என்பதால் பஸ் நிலைய வளாகத்தை சுற்றிலும் முதற்கட்டமாக டவுன் பஸ்களை இயக்குவதற்கு திட்டமிடப்பட்டது. அதற்காக பஸ் நிலையத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த தட்டி வேலிகள் அகற்றி, பஸ்கள் வந்து செல்ல வழி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இதையடுத்து நேற்று அரசு பஸ்களை கொண்டு பஸ் நிலையத்தை சுற்றி இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. சந்திப்பு அண்ணா சிலையை கடந்து பஸ் நிலையத்துக்கு முன்பாக பஸ்கள் இடதுபக்கம் திரும்பி பாரதியார் சிலை, மதுரை ரோடு வழியாக சென்று, பஸ் நிலையத்தின் கிழக்கு பகுதியில் நின்று பயணிகளை அழைத்து செல்லும் வகையில் அந்த பஸ்கள் இயக்கப்பட்டது.

இந்த பணிகளை மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாநகர போலீஸ் துணை கமிஷனர் அனிதா, போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

5 பயணிகள் நிழற்குடைகள்

பஸ் நிலையத்தின் கிழக்கு பகுதியில் அதாவது ராஜா பில்டிங் எதிரே 5 பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுகிறது. அதிலிருந்து பாளையங்கோட்டை மார்க்கம், புதிய பஸ் நிலையம், தச்சநல்லூர், சேரன்மாதேவி மற்றும் டவுன் மார்க்கமாக செல்லும் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதற்கான சோதனை ஓட்டம் தொடர்ந்து நடத்தி, வருகிற 19-ந் தேதி முதல் முழுமையாக அனைத்து டவுன் பஸ்களையும் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. பாளையங்கோட்டை -டவுன் மார்க்க பஸ்கள் சந்திப்பு பஸ் நிலையத்துக்குள் வந்து செல்ல வேண்டுமெனில் தேவர் சிலை அருகே உள்ள தடுப்பு அகற்றப்பட வேண்டி உள்ளது. அது தொடர்பாகவும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து அனைத்து டவுன் பஸ்களும் இயக்கப்படும் போது வண்ணார்பேட்டையில் அதிக எண்ணிக்கையில் உள்ள பஸ் நிறுத்தங்களை நீக்கிவிட்டு, ஒரே பிளாட்பாரமாக மாற்றுவதற்கும் திட்டமிடப்பட்டு உள்ளது.

வணிகர்கள் கோரிக்கை

இந்த ஆய்வின் போது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நெல்லை மாவட்ட தலைவர் செல்வராஜ், செயலாளர் நயன்சிங் மற்றும் சந்திப்பு பகுதி வியாபாரிகள் உடனிருந்தனர். அவர்கள் முதற்கட்டமாக பஸ் விடுவதற்கு நன்றியை தெரிவித்ததுடன், விரைவில் பஸ் நிலைய கட்டுமான பணிகளை முடித்து, வழக்கம் போல் அனைத்து பஸ்களையும் இயக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். அப்போது ஆகஸ்டு மாதத்துக்குள் பஸ் நிலைய பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு முழுவீச்சில் செயல்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.


Next Story