இலவச மருத்துவ முகாம்


இலவச மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 21 Feb 2023 12:15 AM IST (Updated: 21 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே வீராசமுத்திரத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.

தென்காசி

கடையம்:

கடையம் அருகே வீராசமுத்திரம் செய்யது மசூது (ஒலி) ஜூம்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75-வது பவள விழா மாநாட்டை முன்னிட்டு, தென்காசி மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், அப்பல்லோ பார்மஸி மற்றும் டாக்டர் அகர்வால் மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாம் நடத்தியது. கண் சிகிச்சை, சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய், பரிசோதனை செய்யப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

நெல்லை அகர்வால் கண் மருத்துவமனை தென் மண்டல மருத்துவ இயக்குனர் டாக்டர் லயனல் ராஜ் தலைமையிலான மருத்துவ குழுவினர், அகர்வால் முதன்மை முகாம் மேலாளர் ஆசை மாணிக்கம், விழி ஒளி ஆய்வாளர் சிஞ்சு, இளநிலை விழி ஒளி ஆய்வாளர்கள் மனோ, கிபா, ரான்சிகா அடங்கிய குழுவினர் பரிசோதனை செய்தனர். கடையம் அப்பல்லோ பார்மஸி சார்பாக இலவசமாக நீரிழிவு நோய் மற்றும் இரத்த அழுத்த பரிசோதனை செய்யப்பட்டது.

மருத்துவ முகாமுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலைய பேச்சாளர் தென்காசி முகம்மது அலி தலைமை தாங்கினார். கடையம் ஒன்றிய செயலாளர் காதர் மைதீன் வரவேற்றார். வீராசமுத்திரம் ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் காஜா மைதீன், ரவணசமுத்திரம் பிரைமரி தலைவர் இக்பால், செயலாளர் சாகுல் ஹமீது காசியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொட்டல்புதூர் மாணவரணி பொறுப்பாளர் பைசல் நன்றி கூறினார். வீராசமுத்திரம் பஞ்சாயத்து தலைவி ஜீனத் பீவி முகாமை தொடங்கி வைத்தார். தி.மு.க. மாவட்ட பிரதிநிதி யாகூப், ஒன்றிய இளைஞரணி பொறுப்பாளர் ரிபாய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட அமைப்புச் செயலாளர் கட்டி அப்துல் காதர் செய்திருந்தார்.


Next Story