தூய்மை பணியாளர்களுக்கு இலவச வீட்டு மனைபட்டா : கலெக்டர் தகவல்


தூய்மை பணியாளர்களுக்கு இலவச வீட்டு மனைபட்டா : கலெக்டர் தகவல்
x

தூய்மை பணியாளர் களுக்கு இலவச வீட்டு மனைபட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாக கலெக்டர் பிரபுசங்கர் தெரி வித்துள்ளார்.

கரூர்

ஆய்வு கூட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பாக செயல்படுத்தப்படும் தூய்மை பாரத இயக்கம் ஊரகப்பகுதி திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரபு சங்கர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அனைத்து கிராமங்களிலும் குப்பைகளை முழுமையாக அகற்றி மக்கும் குப்பை மக்காத குப்பை என்று தரம் பிரித்து சேகரிக்க வேண்டும். திறந்தவெளியில் மலம் கழித்தல் அற்ற கிராமங்களை உருவாக்க அனைத்து கிராமங்களிலும், அனைத்து பள்ளியிலும், அங்கன்வாடிகளிலும் கழிவறைகள் உள்ளதை உறுதி செய்ய வேண்டும். குப்பைகள் இல்லாத கிராமங்களை உருவாக்குவது நம்முடைய முதன்மையான நோக்கமாக இருக்க வேண்டும்.

புகார் தெரிவிக்க அமைப்பு

தூய்மை காவலர்கள் மூலம் நாள்தோறும் வீடு, வீடாக சென்று மக்கும் குப்பை மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு தெருவிற்கும் குடிநீர் செல்கிறதா?, சாலைகள் இருக்கிறதா?, நாள்தோறும் குப்பைகள் சேகரிக்கப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.

தூய்மை காவலர்கள் தெருக்களை சுத்தம் செய்ய குறுகிய காலத்தில் வரவில்லை என்றால் புகார் தெரிவிப்பதற்கான ஒரு அமைப்பையும் உருவாக்க வேண்டும். சேகரிக்கப்படும் குப்பைகளை முறையான இடத்தில் மொத்தமாக சேகரித்து மக்கும் குப்பைகளை 48 நாட்களுக்கு மண்ணில் புதைத்து உரமாக மாற்ற வேண்டும்.

இலவச வீட்டுமனை பட்டா

அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தில் அனைவரையும் உறுப்பினர்களாக சேர வைக்க வேண்டும். அதன் மூலம் அரசின் அனைத்து நலத்திட்டங்களும் அவர்களுக்கு கிடைத்திட நாம் உதவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வாணி ஈஸ்வரி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அன்புமணி, அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அனைத்து ஊராட்சிகளின் பொறியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story