விவசாயிகளுக்கு ரூ.21 லட்சம் கொடுக்காமல் மோசடி


விவசாயிகளுக்கு ரூ.21 லட்சம் கொடுக்காமல் மோசடி
x
தினத்தந்தி 12 Oct 2023 6:45 PM GMT (Updated: 12 Oct 2023 6:47 PM GMT)

சங்கராபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளுக்கு ரூ.21 லட்சம் கொடுக்காமல் மோசடி செய்த 2 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்:

சங்கராபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த 11.9.2023 அன்று விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்பனை செய்தனர். அதன்பிறகு ஒரு மாதமாகியும் விவசாயிகளுக்கு பணம் வழங்கவில்லை.

இந்த பணத்தை விவசாயிகள் கேட்டபோது, அதிகாரிகள் சரியாக பதில் கூறவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகளை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து விழுப்புரம் விற்பனை குழு செயலாளர் ரவி (பொறுப்பு) நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

ரூ.21 லட்சம் மோசடி

விசாரணையில், சங்கராபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சந்தை ஆய்வாளராக பணிபுரிந்து வரும் உளுந்தூர்பேட்டை தாலுகா எறையூர்பாளையத்தை சேர்ந்த நந்தகுமார் மகன் விஜயகுமார்(வயது 30) என்பவர் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு செலுத்த வேண்டிய ரூ. 21 லட்சத்து 18 ஆயிரத்து 241-ஐ தனது வங்கி கணக்கில் வரவு வைத்து மோசடி செய்ததும், இதற்கு ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளரான கள்ளக்குறிச்சி தாலுகா அனுமந்தல் கிராமத்தை சேர்ந்த ஜெகநாதன் மகன் பிரவீன் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

சங்கராபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளுக்கு ரூ.21 லட்சம் கொடுக்காமல் மோசடி செய்த 2 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து விழுப்புரம் விற்பனை குழு செயலாளர் ரவி, சங்கராபுரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் விஜயகுமார், பிரவீன் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சென்னை வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகதுறை இணை இயக்குனர் ஜெயக்குமார் நேற்று சங்கராபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story