முன்னாள் எம்.எல்.ஏ. மகன் மீது துப்பாக்கி சூடு:உரிய விசாரணை நடத்தக்கோரி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை


முன்னாள் எம்.எல்.ஏ. மகன் மீது துப்பாக்கி சூடு:உரிய விசாரணை நடத்தக்கோரி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை
x

முன்னாள் எம்.எல்.ஏ. மகன் மீது துப்பாக்கி சூடு நடத்திய வழக்கில் உரிய விசாரணை நடத்திட கோரி அவரது ஆதரவாளர்கள் விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

விருத்தாசலம்,

துப்பாக்கி சூடு

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரை சேர்ந்தவர் தியாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. இவருடைய மகன் இளையராஜாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த ராஜசேகர் மனைவி மங்கையற்கரசி தரப்பினருக்கும் இடையே தேர்தல் பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி ராஜசேகர் மகன்களான ஆடலரசு, புகழேந்திராஜா உள்ளிட்டோர் இளையராஜாவை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்றனர். இதில் பலத்த காயமடைந்த இளையராஜா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். இதனிடையே மேற்கண்ட சம்பவத்தில் தொடர்புடைய 12 பேரை விருத்தாசலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

இந்நிலையில் மணவாளநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் நீதிராஜன் தலைமையில் இளையராஜா தனது ஆதரவாளர்களுடன் நேற்று விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தார். பின்னர் அவர்கள் துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு காரணமான ஆடல்அரசுவின் உறவினர் அருள்குமார் என்பவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்த கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினார்.

மனு

அப்போது இளையராஜா தரப்பினர் செந்தில்குமாரிடம் ஒரு மனு அளித்தனர். அதில் துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு ஆடலரசு மற்றும் புகழேந்தி ராஜாவின் உறவினர் அருள்குமார் என்பவர் தான் முழு காரணம். துப்பாக்கி சூடு நடந்த அன்றையதினம் தனது வாக்கு மூலத்தில் அருள்குமார் பெயரை கூறியதாகவும், ஆனால் தற்போது வரை அருள்குமாரின் பெயரை போலீசார் வழக்கில் சேர்க்கவில்லை. ஆகவே அருள்குமாரின் பெயரை மேற்கண்ட வழக்கில் சேர்க்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்ற கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார் இதுகுறித்து உயர் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதனை ஏற்ற இளையராஜா தரப்பினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story