பொருளாதாரத்தில் பின்தங்கிய உயா் வகுப்பினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு ஏற்புடையதா?


பொருளாதாரத்தில் பின்தங்கிய உயா் வகுப்பினருக்கு  10 சதவீதம் இடஒதுக்கீடு ஏற்புடையதா?
x

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 8-ந் தேதி 103-வது அரசியல் சட்ட திருத்த மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

கரூர்

10 சதவீதம் இடஒதுக்கீடு

இதையடுத்து ஜனவரி 9-ந் தேதி மாநிலங்களவையிலும் இந்த மசோதா நிறைவேறியது. இதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் வழங்கினார். 10 சதவீதம் இடஒதுக்கீடு சட்டத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்த அரசியல் சட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் 40 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் தமிழகத்தில் இருந்து தி.மு.க. சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட சிலரும் இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதுதொடர்பான மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ந் தேதி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதேநேரத்தில் இந்த இடஒதுக்கீட்டுக்கு தடைவிதிக்க முடியாது என்றும் மறுத்துவிட்டது.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இருந்து வந்த நிலையில், மனுக்களை விசாரிக்க கடந்த செப்டம்பர் மாதம் 8-ந் தேதி தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, எஸ்.பி.பார்திவாலா, எஸ்.ரவீந்திர பட், பேலா திரிவேதி ஆகியோர் அடங்கிய 5 பேர் கொண்ட அரசியல் சட்ட அமர்வு அமைக்கப்பட்டது.

அரசியல் சட்ட அமர்வு கடந்த 7-ந் தேதி (நேற்று முன்தினம்) இந்த வழக்கில் தீர்ப்பு அளித்தது. அதன்படி, 40 மனுக்கள் மீது 4 தனித்தனி தீர்ப்புகள் வெளியிடப்பட்டன. இதில் தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி ரவீந்திர பட் ஆகியோர் 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராகவும், நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, எஸ்.பி.பார்திவாலா, பேலா திரிவேதி ஆகியோர் 10 சதவீத இடஒதுக்கீடுக்கு ஆதரவாகவும் தீர்ப்பு வழங்கினர்.

ஏற்றுக்கொள்ளக்கூடியதா?

பெரும்பான்மை அடிப்படையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான இடஒதுக்கீடு சுப்ரீம் கோர்ட்டின் ஆதரவை பெற்றதோடு, மத்திய அரசின் இந்த இடஒதுக்கீடு சட்டம் செல்லும் என்றும் இந்த அரசியல் சட்ட அமர்வு உறுதி செய்துள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசு கொண்டு வந்து, சுப்ரீம் கோர்ட்டின் ஆதரவை பெற்ற இந்த இடஒதுக்கீடு சட்டம் ஏற்றுக்கொள்ளக்கூடியதா? என்பது பற்றி வக்கீல்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் கேட்கப்பட்ட கருத்துகள் வருமாறு:-

ஒன்றும் தவறில்லை

மூத்த வக்கீல் கே.எம்.விஜயன்:- 'இது ஒரு எதிர்வினை ஆற்றல்தான். பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது புதிது அல்ல. மண்டல் கமிஷன் பரிந்துரையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பிக்க முடியாது. இந்த இடஒதுக்கீடு வழங்க அரசியல் அமைப்பு சாசனத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டும் என்று தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பின் அடிப்படையில், அரசியல் அமைப்புச் சாசனத்தில் 103-வது சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டு, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இது ஒன்றும் தவறில்லை. ஒரு பிரிவினருக்கு அதிகபட்சமாக இடஒதுக்கீட்டை வழங்கும்போது, மற்றொரு தரப்புக்கு இதுபோல் இடஒதுக்கீடு வழங்குவது என்பது எதிர்வினை ஆற்றல்தான்'.

இது இறுதியான தீர்ப்பு அல்ல

மூத்த வக்கீல் ஆர்.விடுதலை:- 'அரசியல் அமைப்பு சாசனத்தின் பிரிவு 15-ல் சமூகம் மற்றும் கல்வியில் பின் தங்கியவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கூறுகிறது. ஒரு போதும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இந்த சலுகை வழங்க வேண்டும் என்று கூறவில்லை. சமூகம் மற்றும் கல்வியில் பின் தங்கியவர்கள் என்றால் அது சமுதாயத்தின் குற்றம். ஆனால் ஒருவர் பொருளாதாரத்தில் பின்தங்கியவராக இருந்தால் அது தனி மனித குற்றம். ஒருவர் செல்வந்தர் ஆக வேண்டுமென்றால் அவர் கடுமையாக உழைக்க வேண்டும். இந்த உரிமை அனைவருக்கும் உண்டு. ஆனால் உழைக்காமல், பொருள் சேர்க்காமல் சோம்பேறியாக இருந்துவிட்டு அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது. அரசியல் அமைப்பு சட்டத்தில் 103-வது திருத்தம் கொண்டு வந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது முற்றிலும் தவறு. இடஒதுக்கீடு என்பது 50 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு பல தீர்ப்புகளில் பல ஆண்டுகளாக கூறிவருகிறது. இப்போது 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும்போது, இடஒதுக்கீடு அளவு 50 சதவீதத்தை தாண்டுகிறது. எனவே சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய 5 நீதிபதிகளின் தீர்ப்பு இறுதியானது அல்ல. இது மாற்றத்துக்குரியதுதான். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும். 7 நீதிபதிகள் கொண்ட முழு அமர்வு விசாரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்'.

கண்டனத்தை தெரிவிப்பதா?

வக்கீல் கே.ஆர்.தமிழ்மணி:- 'மண்டல் கமிஷன் அறிக்கையை தொடர்ந்து போராட்டத்தின் தொடர்ச்சியாக முற்படுத்தப்பட்டவர்களுக்கு இந்த இடஒதுக்கீடு வழங்க முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் நடவடிக்கை எடுத்தார். இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சாதி என்று கூறாமல், பொருளாதாரத்தில் பின்தங்கிய இஸ்லாமியர், கிறிஸ்தவர் உள்பட அனைவருக்கும் இந்த இடஒதுக்கீடு பயன் அளிக்கும். தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அரசு உதவி பெறும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு இந்த சலுகை இல்லை. இந்த சலுகையின் அர்த்தம் என்னவென்றால், அரசு பள்ளியில் ஏழைகள் தான் படிப்பார்கள். அதனால் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு இந்த சலுகையை தமிழ்நாடு அரசு வழங்குகிறது. அதனை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் வரவேற்கிறது. இதே போன்ற சலுகையை நாடு முழுவதும் மோடி அரசு கொண்டு வந்தால் அதற்கு கடும் கணடனத்தை தெரிவிப்பதா?. அரசியல் அமைப்பு சட்டத்தில் சமூகம், கல்வியில் பின் தங்கியவர்கள் என்பதுடன், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களையும் மத்திய அரசு சட்டத்திருத்தம் மூலம் சேர்த்திருக்கிறது. இது அனைத்து ஏழைகளுக்கும் வழங்கப்படுகின்ற ஒதுக்கீடு. இதை சாதி, அரசியல் ரீதியாக பார்க்கக்கூடாது. இந்த சலுகையே மிக குறைவு என்று கருதுகிறேன். ஏனென்றால் சாதி ரீதியான சலுகைகள் வழங்கப்படும் வரை சாதிகளை ஒழிக்க முடியாது. ஒரு ஏழை-எளியவர்களுக்குதான் உதவிகளை செய்ய வேண்டும்.

ஏற்றுக்கொள்ளக்கூடியது இல்லை

வக்கீல் கே.சாந்தக்குமாரி:- 'சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு பல கோடி இந்திய மக்களுக்கு எதிரான தீர்ப்பாக நான் கருதுகிறேன். இந்த தீர்ப்பு சட்டமாக மாறிவிடக்கூடாது. 5 நீதிபதிகள் தீர்ப்பில் நீதிபதி ரவீந்திர பட் தன்னுடைய தீர்ப்பில், 2010-ம் ஆண்டு வெளியான சினோ கமிஷன் அறிக்கையின்படி, நாட்டில் எஸ்.சி. மக்களில் 38 சதவீதம் பேரும், எஸ்.டி. மக்களில் 48 சதவீதம் பேரும், பி.சி. (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) மக்களில் 18.2 சதவீதம் பேரும் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர் என்று கூறியுள்ளார். எனவே இதை பார்க்கும்போது பி.சி., எஸ்.சி., எஸ்.டி. ஆகிய பிரிவினர் இன்றளவும் மிகவும் வறுமையில் வாழ்கின்றனர் என்று தெரிகிறது. மொத்த இடங்களில் 50 சதவீதம் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு வழங்கப்படுகிறது. பொதுப்பிரிவினருக்கு வழங்கப்படும் மீதமுள்ள 50 சதவீதத்தில் பொருளாதார ரீதியாக 10 சதவீத இடஒதுக்கீடு முன்னேறிய வகுப்பினருக்கு வழங்குவது அரசியல் சாசனம் வழங்கியுள்ள சமதர்மத்துக்கு விரோதமானது. பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் என்று சொல்லும்போது அதில் முற்படுத்தப்பட்டவர்களை மட்டும் சேர்க்காமல், பிற்படுத்தப்பட்டோர் எஸ்.சி., எஸ்.டி. என அனைவரையும் சேர்த்திருக்க வேண்டும். அதுதான் சமதர்ம இடஒதுக்கீடு ஆகும். ஆனால் முற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமே 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது பிற பிரிவினருக்கு வழங்கப்படும் சலுகையை மறுப்பது போல் ஆகும். இந்த தீர்ப்பு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை'.

சமூக நீதி பாதிக்கப்படும்

கரூரை சேர்ந்த வக்கீல் தமிழ்வாணன்:- சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய இந்த தீர்ப்பு குறித்து சமூக நீதி இயக்கங்கள் சீராய்வு மனு தாக்கல் செய்வதின் மூலமாக மட்டுமே நூற்றாண்டு கால போராட்டமான சம நீதி, சமூக கட்டமைப்பை வலுப்படுத்த இயலும். இல்லையெனில் சமூக நீதி பாதிக்கப்படும்.

வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு

கரூரை சேர்ந்த சமூக ஆர்வலர் மேலை.பழனியப்பன்:- இட ஒதுக்கீடு என்று வந்தாலே எல்லோரும் எதிர்பார்ப்பது நியாயமானதுதான். ஒரு சமுதாயம் பொருளாதாரத்தில் உயர்நிலை அடைந்தவர்களை மிகுதியாக கொண்டிருக்கலாம். ஆனால் நம் பார்வை அதில் பின் தங்கியவர்களை கைப்பிடித்து கரையேற்றுவதாக இருக்க வேண்டும். இந்த தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு.

மேல்முறையீடு

புகழூரை சேர்ந்த சரவணன்:- உயர் சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., ஓ.பி.சி. போன்ற பிரிவினருக்கு எத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு செய்வது. தாழ்த்தப்பட்டவர்களுக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் அதிக இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அப்போதுதான் அந்த இனத்தை சேர்ந்த ஏழைகள் முன்னேறுவதற்கு உகந்ததாக இருக்கும். இந்தநிலையில் உயர் சாதியினருக்கு மட்டுமே 10 சதவீத இட ஒதுக்கீடு செய்வது நியாயமானது அல்ல. எனவே இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story