தஞ்சையில் 4 இடங்களில் மேம்பாலம் கட்டப்படும்


தஞ்சையில் 4 இடங்களில் மேம்பாலம் கட்டப்படும்
x

தஞ்சையில் 4 இடங்களில் மேம்பாலம் கட்டப்படும்

தஞ்சாவூர்

தஞ்சை மாநகரில் 4 இடங்களில் மேம்பாலம் கட்டப்படுகிறது. இதற்கான ஆய்வுப்பணிகள் முடிந்து திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது என்று மேயர் சண்.ராமநாதன் கூறினார்.

தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு

தஞ்சை மாநகராட்சி சார்பில் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் அடிப்படையில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை பாராட்டி பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி தஞ்சை கல்லுக்குளத்தில் உள்ள ஆரம்ப சுகாதாரநிலைய வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

விழாவிற்கு மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தலைமை தாங்கினார். துணைமேயர் டாக்டர் அஞ்சுகம்பூதிபதி, மண்டலக்குழு தலைவர் ரம்யாசரவணன், கவுன்சிலர்கள் கண்ணுக்கினியாள், ஸ்டெல்லாநேசமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேயர் சண்.ராமநாதன்

விழாவில் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் கலந்து கொண்டு 50-க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவு பரிசினை வழங்கினார். மேலும் அங்கு நடந்த இலவச மருத்துவமுகாமையும் அவர் தொடங்கி வைத்தார்.

பின்னர் மேயர் சண்.ராமநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தஞ்சை சாந்தப்பிள்ளை கேட் மேம்பாலம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், இந்த பாலத்தை நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் பேரில் சாந்தப்பிள்ளை கேட் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி இந்த பாலத்தை ராமநாதன் ரவுண்டானா வரை நீட்டிக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

4 மேம்பாலங்கள்

இதே போல் தஞ்சை பழைய கோர்ட் சாலையில் ஆயுதப்படை மைதானத்தின் அருகே இருந்து ஒரு மேம்பாலம் தொடங்கி ஒரு பிரிவு டெம்பிள்டவர் ஓட்டல் வரையும், மற்றொரு பிரிவு ரெட்கிராஸ் அலுவலகம் வரையும் செல்லும் வகையில் கட்டப்பட உள்ளது. அது கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தால் தற்போது உள்ள மேம்பாலம் ஒரு வழிப்பாதையாக பயன்படுத்தப்படும். இதே போல் தஞ்சை சீனிவாசபுரத்தில் இருந்து டி.பி.எஸ். நகர் வரையும் மேம்பாலம் கட்டப்பட உள்ளது.

நாஞ்சிக்கோட்டை சாலையில் இருந்து தஞ்சை ரெயிலடி ஆஞ்சநேயர் கோவில் வரையும் ரெயில்வே வழித்தடத்தின் மேல் பகுதி வழியாக மேம்பாலம் கட்டப்பட உள்ளது. இந்த 4 மேம்பாலங்களும் கலெக்டர் உத்தரவின் பேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தற்போது திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இது அரசுக்கு அனுப்பி ஒப்புதல் கிடைக்கப்பெற்றவுடன் பாலப்பணிகள் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story