கோவையில் பூக்கள் விலை உயர்வு


கோவையில் பூக்கள் விலை உயர்வு
x
தினத்தந்தி 24 Oct 2022 12:15 AM IST (Updated: 24 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் பூக்கள் விலை உயர்ந்தது. ஒரு கிலோ மல்லிகை ரூ.1,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கோயம்புத்தூர்


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் பூக்கள் விலை உயர்ந்தது. ஒரு கிலோ மல்லிகை ரூ.1,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பூ மார்க்கெட்

கோவை ஆர்.எஸ்.புரத்தில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பூக்கள் தினமும் டன் கணக்கில் கொண்டு வந்து மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்யப்படுகிறது. கோவை பூ மார்க்கெட்டில் இருந்து அண்டை மாநிலமான கேரளாவுக்கும் அதிகளவில் பூக்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இங்கு பூக்கள் வரத்தை பொறுத்து அவற்றின் விலை காலை மற்றும் மாலை என 2 முறை நிர்ணயம் செய்யப்படுகிறது. மேலும் பூ மார்க்கெட்டில் பண்டிகை நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்களுக்கு முந்தையை நாளில் பூக்களின் விலை அதிகமாக இருக்கும்.

பூக்களை வாங்க பொதுமக்கள் மட்டுமின்றி உள்ளூர், வெளியூர் வியாபாரிகளும் வந்து குவிந்த வண்ணம் இருப்பார்கள். இந்த நிலையில் தீபாவளி பண்டிகை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனால் பூக்களின் விலை அதிகரித்து உள்ளது.

மல்லிகை பூ ரூ.1,200-க்கு விற்பனை

தற்போது மழை மற்றும் பனிப்பொழிவு நிலவி வருவதால் பூக்களின் வரத்து குறைந்துள்ளது. மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நுகர்வு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கோவை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டது.

இருந்த போதிலும் பண்டிகை காலத்தில் பூக்கள் தேவை என்பதால் பொதுமக்கள் சிலர் பூக்களை வாங்க பூ மார்க்கெட்டுக்கு நேற்று காலை முதலே குவிந்தனர். இதனால் பூக்கள் விற்பனை களைகட்டியது. அதன்படி கடந்த வாரம் ரூ.500-க்கு விற்பனையான மல்லிகை ஒரு கிலோ ரூ.1,200-க்கு விற்பனையானது.

ஒரு தாமரை ரூ.50

மற்ற பூக்களின் விலை நிலவரம் (கிலோவில்) வருமாறு:-

ஜாதி மல்லி ரூ.1000, செவ்வந்தி ரூ.1000, பட்டன் ரோஜா ரூ.1000, அரளி ரூ.400, கோழிக்கொண்டை பூ ரூ.100, நந்தியா வட்டம் ரூ.600, சம்பங்கி ரூ.400, செண்டுமல்லி ரூ.60, வாடாமல்லி ரூ.100.

தாமரை (ஒன்று) ரூ.40 முதல் ரூ.50 வரை, மரிகொழுந்து (ஒரு கட்டு) ரூ.10, துளசி (ஒரு கட்டு) ரூ.20 என விற்பனை செய்யப்பட்டது.

கோவை பூ மார்க்கெட்டுக்கு நேற்று பூக்கள் வாங்க பொதுமக்கள் குவிந்ததால் அங்குள்ள சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Next Story