அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு


அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 8 July 2023 8:15 PM GMT (Updated: 8 July 2023 8:15 PM GMT)

தமிழக-கேரள வனப்பகுதியில் கனமழை பெய்து வருவதால், அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

கோயம்புத்தூர்

வால்பாறை

தமிழக-கேரள வனப்பகுதியில் கனமழை பெய்து வருவதால், அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

மேல்நீராறு அணை

வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. இதனால் சுற்று வட்டார பகுதியில் உள்ள ஆறுகளில் தொடர்ந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. குறிப்பாக மேல்நீராறு, கீழ்நீராறு அணை பகுதியை ஒட்டிய வனப்பகுதிகளிலும் விட்டுவிட்டு கனமழை பெய்து வருவதால் அந்த அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. மேல்நீராறு அணைக்கு வரக்கூடிய தண்ணீர் அணையின் டனல் மூலமாக வெள்ளமலை எஸ்டேட் டனல் வழியாக சோலையாறு அணைக்கு சென்று வருகிறது. இதனால் 1,974 கன அடி தண்ணீர் வெள்ளமலை டனல் ஆற்றில் பாய்ந்தோடி வருகிறது.

தடுப்புச்சுவர் இடிந்தது

இதற்கிடையில் நேற்று மாலை 5 மணிக்கு வாழைத்தோட்டம் ஆற்றங்கரையோர தடுப்புச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதை அறிந்து வந்த தாசில்தார் அருள்முருகன், நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி ஆகியோர் துப்புரவு பணியாளர்களை அழைத்து வந்து தற்காலிக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு குடியிருப்பு பகுதி மக்கள் தடுப்புச்சுவர் இடிந்துள்ள வழியாக நடந்து செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தினர்.

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி

வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான கூழாங்கல் ஆற்றில் செல்லும் வெள்ளம், அருகில் உள்ள தேயிலை தோட்டங்களை தொட்டபடி சென்று வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஆற்றில் இறங்கி குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். வால்பாறை வனப்பகுதி மட்டுமின்றி கேரள வனப்பகுதியிலும் கனமழை பெய்து வருவதால் வால்பாறையில் இருந்து சாலக்குடி செல்லும் வழியில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் வால்பாறைக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு சென்று கண்டு ரசித்து செல்கின்றனர்.


Next Story