பெரம்பலூரில் முதல் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய காளையர்கள்


பெரம்பலூரில் நடைபெற்ற முதல் ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை காளையர்கள் வீரத்துடன் அடக்கினர். மாடுகள் முட்டி 23 பேர் காயம் அடைந்தனர்.

பெரம்பலூர்

ஜல்லிக்கட்டு

பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி வேப்பந்தட்டையை அடுத்துள்ள தொண்டமாந்துறை கிராமத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஆவிடிச்சி அம்மன் கோவில் எதிரே பள்ளிவாசலுக்கு சொந்தமான நிலத்தில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. இதனை மாவட்ட கலெக்டர் கற்பகம், போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதையடுத்து, நேற்று காலை 7 மணிக்கு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 536 காளைகளும், 250 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். முதலில் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டன. பின்னர் மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

பரிசு பொருட்கள்

இதையடுத்து ஜல்லிக்கட்டு போட்டியை பெரம்பலூர் ஆர்.டி.ஓ. நிறைமதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன்பின் ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை கண்டு சில வீரர்கள் சிதறி ஓடினர். திமிறிய காளைகளை சில காளையர்கள் திமிலை பிடித்து வீரத்துடன் அடக்கினர். சில ஜல்லிக்கட்டு காளைகள் களத்தில் நின்று வீரர்களை பந்தாடியது. அப்போது பார்வையாளர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்து வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

ஜல்லிக்கட்டு மதியம் 2.30 மணிக்கு நிறைவடைந்தது. காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், கட்டில், பீரோ, நாற்காலி, மிக்சி, குக்கர், பாத்திரங்கள், தங்க நாணயம் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

23 பேர் காயம்

ஜல்லிக்கட்டு காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 23 பேர் காயமடைந்தனர். இதில் லேசான காயமடைந்தவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். 2 பேர் ேமல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஜல்லிக்கட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டு களித்தனர்.

விழா ஏற்பாட்டாளர்கள் ஆங்காங்கே குடிநீர், நீர்மோர் உள்ளிட்டவைகளை பார்வையாளர்களுக்கு வழங்கினார்கள். அரும்பாவூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story