காஞ்சீபுரத்தில் நிதி நிறுவன இயக்குனரின் உறவினர் வீடு முற்றுகை


காஞ்சீபுரத்தில் நிதி நிறுவன இயக்குனரின் உறவினர் வீடு முற்றுகை
x

காஞ்சீபுரத்தில் நிதி நிறுவன இயக்குனரின் உறவினர் வீடு முற்றுகையிடப்பட்டது.

காஞ்சிபுரம்

பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட, ஐ.எப்.எஸ். நிதி நிறுவனம் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்து இதுவரை 6 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1 கோடியே 46 லட்சம் மற்றும் நகைகள், 16 கார்கள், 46 அசையா சொத்துக்கள் போன்றவற்றை போலீசார் பறிமுதலும் செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வாழைபந்தல் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த செல்வராஜ். இவர் காஞ்சீபுரம் குருவிமலை அடுத்துள்ள வளத்தோட்டம் பகுதியிலுள்ள தனது சகோதரி ராதாம்மாள் என்பவரது வீட்டில் வசித்து வந்தார். ஓரகடம் பகுதியில் ஐ.எப்.எஸ். நிதி நிறுவன கிளை அலுவலகத்தை நடத்தி வந்தார்.

தொழிற்சாலைகளில் பணிபுரிந்த பலர் ஆனந்த் செல்வராஜ் நடத்திய கிளை அலுவலகத்தில் பணம் செலுத்தி வந்தனர். அதே போல் இவரது சகோதரியின் வீடு அமைந்துள்ள பகுதியை ஒட்டியுள்ள களக்காட்டூர், ஓரிக்கை, தூசி போன்ற சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் இவரிடம் பணம் செலுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஒரு வருட காலமாக ஆனந்த் செல்வராஜ் தலைமறைவாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தங்களது பணம் குறித்து பொதுமக்கள் அவரது சகோதரி ராதாம்மாளிடம் தொடர்ந்து கேட்டுவந்தனர். நேற்று அவரது சகோதரி வீட்டுக்கு சென்ற பாதிக்கப்பட்டவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் பணம் குறித்து கேட்டனர். இது குறித்து ராதாம்மாள், என்னிடம் கேட்காதீர்கள் என்று பதிலளித்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டு அங்கு இருந்த கண்காணிப்பு கேமரா மற்றும் இருசக்கர வாகனத்தை அடித்து உடைத்தனர். அந்த வீட்டை முற்றுகையிட்ட நிலையில் அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்க கூறியதன் பேரில் அவர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story