பணத்தை சுருட்டிய 17 பேர் கும்பல் கைது;22 ஆயிரம் சிம்கார்டுகளும் சிக்கின


பணத்தை சுருட்டிய 17 பேர் கும்பல் கைது;22 ஆயிரம் சிம்கார்டுகளும் சிக்கின
x
தினத்தந்தி 4 March 2023 6:45 PM GMT (Updated: 4 March 2023 6:46 PM GMT)

வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக கூறி செல்போன்களுக்கு குறுந்தகவல் அனுப்பி தமிழகம் முழுவதும் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 22 ஆயிரம் சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சிவகங்கை

வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக கூறி செல்போன்களுக்கு குறுந்தகவல் அனுப்பி தமிழகம் முழுவதும் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 22 ஆயிரம் சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

செல்போனில் குறுந்தகவல்

ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. துரை சிவகங்கையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் இணையதள வழியில் மோசடியாக பணம் எடுக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்றன. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் கடந்த 2 மாதத்தில் மட்டும் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த 27-ந் தேதி ஒரே நாளில் 2 பேருக்கு செல்போனில் குறுந்தகவல் அனுப்பி, வங்கிக்கணக்கு முடக்கப்பட்டதாகவும், அனுப்பப்பட்டுள்ள லிங்கில் வங்கிக்கணக்கு விவரங்களை தெரிவிக்கும்படியும் கூறப்பட்டிருந்தது. அதில் கூறியபடி விவரங்களை பதிவு செய்தபோது சம்பந்தப்பட்டவர்கள் வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டது.

இதில் தொடர்புடையவர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் கண்காணிப்பில், சைபர் கிரைம் கூடுதல் சூப்பிரண்டு நமசிவாயம் தலைமையில், காரைக்குடி உதவி சூப்பிரண்டு ஸ்டாலின், சிவகங்கை துணை சூப்பிரண்டு சிபிசாய் சவுந்தர்யன் மேற்பார்வையில் சைபர் கிரைம் போலீசாரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

22 ஆயிரம் சிம்கார்டுகள்

இந்த தனிப்படையினர் குறுந்தகவல் அனுப்பிய செல்போன் எண்ணை ஆய்வுசெய்தபோது அது போலியானது என்பதும், கோவை பீளமேடு பகுதியில் இருந்து தகவல்கள் அனுப்பப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அங்கு தனியாக ஒரு கம்பெனி போல் சிலர் செயல்பட்டு வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து போலீசார் அங்கிருந்த சரவணன் (வயது 52), அவரது மனைவி பாரதி (44), அங்கு பணிபுரிந்த 5 பெண்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 11 லேப்டாப்கள், 19 கம்ப்யூட்டர்கள், 292 செல்போன்கள், 22 ஆயிரத்து 735 சிம்கார்டுகள், 24 மோடம் பாக்ஸ்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

இந்த கும்பல், ஒரு நாளைக்கு 3 லட்சம் பேருக்கு குறுந்தகவல் அனுப்பி இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு தகவலுக்கு 8 பைசா வீதம் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் ரூபாய் கிடைக்க வேண்டும். இவர்கள் தகவல் அனுப்ப வேண்டிய செல்போன் எண்களை டெல்லியில் இருந்து சையது ரஹீப்குர்ஷித் (23) என்பவர் அனுப்பி வந்துள்ளார்். இதையடுத்து டெல்லி சென்று அவரையும் போலீசார் கைது செய்தனர்.

17 பேர் கைது

மேலும், இந்த மோசடிக்கு கோவையை அடுத்த நாச்சிபாளையத்தை சேர்ந்த ராம்குமார் (29), காரமடையை சேர்ந்த வினோத்குமார் (31) ஆகியோர் மூலமாக செல்போன் சிம் விற்பனை செய்துவந்த டீலர்கள் ஷாநவாஸ் (22), உமர் முகமது (19), பரத் பாலாஜி (30), ஜெயராம் (39), மாரீஸ்வரன் (23), சந்தோஷ் குமார் (22), மூர்த்தி (48) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் இதுவரை 6 பெண்கள் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பொதுமக்களிடம் இருந்து திருடப்படும் பணம் மராட்டியம்,, உத்தரபிரதேசம் போன்ற பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு அனுப்பப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இந்த கும்பல் தமிழகம் முழுவதும் கைவரிசையை காட்டியுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த வழக்கில் திறம்பட செயல்பட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி டி.ஐ.ஜி. துரை பாராட்டினார்.


Next Story