திருவிழா காலங்களில் நிகழ்ச்சிகள் ஏற்பாட்டின்போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு விழா பொறுப்பாளர்களே முழு பொறுப்பு: போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை


திருவிழா காலங்களில் நிகழ்ச்சிகள் ஏற்பாட்டின்போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு விழா பொறுப்பாளர்களே முழு பொறுப்பு: போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
x

திருவிழா காலங்களில் நிகழ்ச்சிகள் ஏற்பாட்டின்போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு விழா பொறுப்பாளர்களே முழு பொறுப்பு எனவும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் எச்சரித்துள்ளார்.

கரூர்

தகராறு

கரூர் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நேற்றுமுன்தினம் இரவு வெகுவிமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் கரூர் படிக்கட்டுதுறை சார்பில் பூத்தட்டு மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றபோது அதில் கலந்து கொண்ட அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பூத்தட்டு ஊர்வலத்தின் முன்பு குடிபோதையில் போலீசாரிடம் தகராறு செய்தும், அவ்வழியே வந்த அரசு வாகனம் மற்றும் வாகனத்தில் வந்த பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி கொண்டும், மேலும் வாகனத்தை சேதப்படுத்தியும் சென்றுள்ளனர்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரின் பேரில் கரூர் டவுன் போலீஸ்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கண்காணிப்பு கேமராக்கள்

கரூர் நகர் முழுவதும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவின்படி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டும், அதன்மூலம் கரூர் மாவட்ட அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் நவீன காவல்கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக கரூர் நகர பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சின்னாண்டாங்கோவில் தரணிதரன் (வயது 21), படிக்கட்டுதுறை கார்த்திக் (19) மற்றும் சிலர் என விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளனர்.

கடுமையான நடவடிக்கை

மேலும் கரூர் மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு பொதுமக்கள், பெண்கள் மற்றும் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்து, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள் மீதும் மற்றும் விழா அமைப்பாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

திருவிழா காலங்களில் நிகழ்ச்சிகள் ஏற்பாட்டின்போது ஏற்படும் பிரச்சனைகளுக்கு விழா பொறுப்பாளர்களே முழு பொறுப்பு. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் எச்சரித்துள்ளார்.


Next Story