ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் உண்ணாவிரதம்


ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் உண்ணாவிரதம்
x

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல்லில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்

உண்ணாவிரத போராட்டம்

அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்திற்கு மேல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பழனியப்பன், சங்கர், அருள்செல்வன், நல்லகுமார், ராஜேந்திரபிரசாத், சிவக்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில ஒருங்கிணைப்பாளர் மலர்விழி, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் முத்துசாமி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொருளாளர் முருக.செல்வராசன், நேரடி நியமனம் பெற்ற முதுகலை ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் ராமு உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

பழைய ஓய்வூதிய திட்டம்

இந்த போராட்டத்தின் போது 2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந் தேதிக்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

இடைநிலை, உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், உடற்கல்வி இயக்குனர் ஆகியோருக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்காமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களையப்பட வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும்.

ஊதிய மாற்ற நிலுவைத்தொகை

21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை முறைப்படுத்த வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளிலும், பல்வேறு அரசுத் துறைகளிலும் தனியார் முகமை மூலம் பணியாளர்களை நியமனம் செய்வதை உடனடியாக தடை செய்ய வேண்டும். அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் ஆசிரியர்களை, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் மட்டுமே பணி அமர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் ஆசிரிய, ஆசிரியைகள், அரசு பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். காலை 10 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரத போராட்டம் மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.


Next Story