விவசாய பணிகளை தொடங்கிய விவசாயிகள்


விவசாய பணிகளை தொடங்கிய விவசாயிகள்
x
தினத்தந்தி 29 Dec 2022 6:45 PM GMT (Updated: 29 Dec 2022 6:46 PM GMT)

ராமநாதபுரத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்த நிலையில் பெரிய கண்மாயில் உள்ள வைகை தண்ணீரை நம்பி விவசாயிகள் தாமதமாக விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர்.

ராமநாதபுரம்


ராமநாதபுரத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்த நிலையில் பெரிய கண்மாயில் உள்ள வைகை தண்ணீரை நம்பி விவசாயிகள் தாமதமாக விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர்.

ஏமாற்றம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை வழக்கமாக அக்டோபர் 20-ந்தேதி தொடங்கி நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்யும் நிலையில் இந்த ஆண்டு தாமதமாக தொடங்கியது. அந்த மழையும் ஒருசில நாட்கள் மட்டுமே பெய்த நிலையில் விவசாயிகளையும் ராமநாதபுரம் மாவட்ட மக்களையும் ஏமாற்றியது.. ஒருசில நாட்கள் பெய்த கனமழையும் பயனின்றி கடல் பகுதியில்தான் பெய்தது. மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிட்டதாகவே கருதப்படுகிறது.

ஏனெனில் டிசம்பர் மாத இறுதியிலாவது மழை பெய்யும் என எதிர்பார்த்திருந்த நிலையில் அந்த மழையும் பெய்யாமல் போய்விட்டது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்யும் என எதிர்பார்த்து சுமார் 1 லட்சத்து 35 ஆயிரம் எக்டே ரில் நெல் விவசாயம் செய்திருந்த விவசாயிகள் மழையில்லாமல் போனதால் கடும் ஏமாற்றமடைந்தனர். இதனால் பல பகுதிகளில் தேவையான நேரத்தில் மழை பெய்யாததால் பயிர்கள் கருகிவிட்டன. நெல்மணிகள் வரும் முன்னரே பயிர்கள் கருகியதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில் வைகை தண்ணீர் பாயாத பகுதிகளில் இந்த நிலை நிலவி வருகிறது. மாறாக வைகை தண்ணீர் பாயும் பகுதிகளில் நெற்பயிர்கள் நன்றாக வளர்ந்து நல்ல விளைச்சல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் பருவமழைக்கு முன்னதாகவே வைகை தண்ணீர் எடுத்து நீர்நிலைகளை நிரப்பியதாலும், வைகை உபரிநீர் வந்ததாலும், மழை ஓரளவு பெய்ததாலும் நீர்நிலைகள் நிரம்பி விவசாயத்திற்கு கைகொடுத்துள்ளது.

விவசாய பணி

இந்தநிலையில் ராமநாதபுரம் பெரிய கண்மாயை ஒட்டிய சூரங்கோட்டை, முதுனாள், தொருவளூர் உள்ளிட்ட பகுதிகளில் மழையை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகள் இந்த ஆண்டு மழை பொய்த்ததால் விவசாயத்தை மேற்கொள்ளலாமா என்று காத்திருந்தனர். ஆனால் பெரிய கண்மாயில் நன்றாக தண்ணீர் இருந்ததால் அதனை நம்பி விவசாய பணிகளை தொடங்கினர். அவர்களின் நம்பிக்கையை வீணாக்காத வகையில் கண்மாயில் தொடர்ந்து தண்ணீர் இருப்பதோடு ராமநாதபுரம் மாவட்ட விவசாயத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் ராமநாதபுரம் நோக்கி வேகமாக வந்து கொண்டிருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து சூரங்கோட்டை விவசாயி அரவிந்த் கூறியதாவது:-

மழை இல்லாததால் விவசாய பணிகளை தொடங்காமல் தயங்கினோம். பெரிய கண்மாயில் தண்ணீர் உள்ளதால் அதனை நம்பி விவசாய பணிகளை தாமதமாக தொடங்கினோம். தற்போது பயிர்கள் நன்றாக வளர்ந்து வருகிறது.. ஒரு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வரை செலவாகிறது. முன்பு ஒரு மூடை நெல் ரூ.1,200 வரை விலை போன நிலையில் தற்போது ரூ.800-ஐ தாண்டுவது இல்லை. இதனால் விவசாயம் செய்ய வேண்டுமா என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். நிலத்தை வீணாக போடக்கூடாது என்பதற்காக பயிரிட்டுள்ளோம். இவ்வாறு கூறினார்.


Next Story