4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் வெளியேற்றம்


4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் வெளியேற்றம்
x
தினத்தந்தி 5 July 2023 8:00 PM GMT (Updated: 6 July 2023 11:13 AM GMT)

குமுளி வனப்பகுதியில் 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை வனத்துறையினர் வெளியேற்றினர்.

தேனி

விவசாயிகள் போராட்டம்

தேனி மாவட்டம் குமுளி அருகே கம்பம் மேற்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட அமராவதி வனப்பகுதியில் ஆசாரிபள்ளம் என்ற இடம் உள்ளது. இங்கு கூடலூர் பகுதியை சேர்ந்த சிலர் பல ஆண்டுகளாக ஏலக்காய், மிளகு, காபி பயிர்களை விவசாயம் செய்து வந்தனர். 1992-ம் ஆண்டுக்கு பிறகு இந்த பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இதில் 18 குடும்பங் களை சேர்ந்த விவசாயிகள், பெண்கள் உள்பட 20 பேர் கடந்த 2-ந்தேதி முதல் வனப்பகுதியில் கூடாரம் அமைத்து தங்கள் நிலத்தை ஒப்படைக்கக்கோரி போராட்டம் நடத்தி வந்தனர்.

வனத்துறையினர் அவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், கொட்டும் மழையிலும் விவசாயிகள் தொடர்ந்து 4-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர்.

பேச்சுவார்த்தை

இந்நிலையில் நேற்று அதிகாலை தேனி மாவட்ட உதவி வன பாதுகாவலர் ஷர்மிலி, கம்பம் மேற்கு வனச்சரகர் ஸ்டாலின், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. பால்பாண்டி, தாசில்தார் சந்திரசேகர், கூடலூர் இன்ஸ்பெக்டர் பிச்சைப்பாண்டி ஆகியோர் தலைமையில் விவசாயிகளுடன் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வனப்பகுதியை விட்டு வெளியே வந்தால் தான் சட்ட ரீதியாக இதற்கு தீர்வு காண்பதற்கான வழிவகை மேற்கொள்ள முடியும் என அதிகாரிகள் விவசாயிகளிடம் கூறினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வனப்பகுதியில் இருந்து வனத்துறை வாகனத்தில் ஏற்றினர். பின்னர் அவர்களை லோயர்கேம்பிலுள்ள வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.

பின்னர் அவர்களிடம், வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது வனப்பகுதிக்குள் சென்றது தவறு. இனிமேல் அவ்வாறு நடக்கக்கூடாது என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதனைத் தொடர்ந்து விவசாயிகள் அனைவரும் அங்கிருந்து அவர்கள் ஊருக்கு புறப்பட்டனர்.இதையடுத்து விவசாயிகளின் 4 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது.


Next Story