குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு


குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு
x

குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு

தஞ்சாவூர்

திருமண்டங்குடி சர்க்கரை ஆலை பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்ததுடன் கையில் கரும்புகளுடன் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கூடுதல் கலெக்டர் என்.ஓ.சுகபுத்ரா தலைமை தாங்கினார். கூட்டம் தொடங்கியதும் விவசாயிகள் அனைவரும் எழுந்து கையில் கரும்புகளுடன் கூடுதல் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் முன்பாக சென்றனர்.

பின்னர் அவர்கள் கூறும்போது, திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளை ஏமாற்றி, அவர்களின் பெயரில் வங்கியில் பல கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்துள்ளது. மேலும் விவசாயிகளுக்கு தர வேண்டிய தொகையை வழங்காமல் ஆலை நிர்வாகம் விவசாயிகளை வஞ்சித்துள்ளது. இந்த பிரச்சினைக்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக தீர்வு காண வலியுறுத்தி வெளிநடப்பு செய்வதாக தெரிவித்தனர்.

இதையடுத்து விவசாயிகள் கையில் கரும்புகளுடன் பல்வேறு கோஷங்கள் எழுப்பியபடி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். வெளியே இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு மீண்டும் விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

தூர்வாரும் பணி

அடுத்த ஆண்டு (2023) ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறப்புக்கு முன்பாக தூர்வாரும் பணிகள் அனைத்தையும் நிறைவு செய்ய வேண்டும். இதனால் ஜனவரி மாதம் 28-ந் தேதி மேட்டூர் அணை மூடப்பட்டவுடன் தூர்வாரும் பணிகளை தொடங்க வேண்டும். தூர்வாரும் பணி தொடர்பாக ஆலோசனை கூட்டத்தை வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் நடத்த வேண்டும்.

ஒக்கநாடு கீழையூர் இறவை பாசன திட்டத்தை புனரமைக்க வேண்டும். பொதுவினியோக திட்டத்தின் மூலம் ரேஷன் கடைகளில் செறியூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும். சம்பா நெல் அறுவடை தொடங்கி இருப்பதால் தேவையான இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். சம்பா நெல் அறுவடைக்கு தேவையான அறுவடை எந்திரங்களை முன்கூட்டியே போதுமான அளவுக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கால்நடைகள் பாதிப்பு

மாவட்டம் முழுவதும் கால்நடைகளுக்கு அம்மை நோய் தாக்கி வருவதால், தடுப்பூசி செலுத்த போதிய முகாமினை அமைக்க வேண்டும். அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை கழிவு நீரை குளத்தில் விடுவதால் கால்நடைகள் பாதிக்கப்படுகிறது. எனவே கழிவு நீரை சுத்திகரித்து மறு பயன்பாட்டுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கண்டவாறு விவசாயிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

கூட்டத்தில் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி செந்தில்குமாரி, வேளாண்மை இணை இயக்குனர் நல்லமுத்துராஜா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தமிழ்நங்கை உள்ளிட்ட அரசு அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story