சேரன்மாதேவியில் விவசாயிகள் சாலை மறியல்


சேரன்மாதேவியில் விவசாயிகள் சாலை மறியல்
x

கன்னடியன் கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி சேரன்மாதேவியில் விவசாயிகள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

இந்த ஆண்டுக்கான கார் பருவ சாகுபடிக்காக பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து கடந்த ஜூலை 19-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இருப்பினும் பருவ மழை பெய்யாததால் அணைகளில் நீர்இருப்பு குறைந்து வந்த நிலையில் சாகுபடிக்கு வழங்கப்பட்ட தண்ணீர் திடீரென நிறுத்தப்பட்டது.

இதனிடையே, கன்னடியன் கால்வாய் பாசனத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் விவசாயிகள் நெல் நாற்று பாவி, நடவு பணிகளை செய்த நிலையில் தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருகும் சூழல் நிலவுகிறது. இதனால் கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுழற்சி முறையில் ஒரு முறை மட்டும் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் பாசனத்துக்கு தண்ணீர் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் கன்னடியன் கால்வாய் பாசன விவசாயிகள் கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று பத்தமடை, சேரன்மாதேவி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றினர். பின்னர் பெண்கள் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் சேரன்மாதேவியில் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு கோஷம் எழுப்பினர். தொடர்ந்து அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் சங்க தலைவர் பாபநாசம், செயலாளர் கண்ணப்பநயினார் உள்ளிட்டோர் உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலமை சந்தித்து விவசாயிகளின் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைத்தனர். பாசனத்துக்கு தண்ணீர் திறக்காவிட்டால் நாளை (சனிக்கிழமை) மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என அதிகாரிகளிடம் விவசாயிகள் தெரிவித்தனர். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.


Next Story