பருத்திக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் சாலை மறியல்


பருத்திக்கு உரிய விலை கிடைக்காததால்  விவசாயிகள் சாலை மறியல்
x

பாபநாசத்தில் பருத்திக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்

பாபநாசத்தில் பருத்திக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பருத்தி ஏலம்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு விவசாயிகள் பருத்தியை ஏல விற்பனைக்கு கொண்டு வந்து வைத்துள்ளனர். இங்கு ஒவ்வொரு வாரத்திலும் வெள்ளிக்கிழமை ஏலம் நடைபெறுவது வழக்கம். கடந்த வாரங்களில் விவசாயிகளுக்கு பருத்திக்கு கிலோவிற்கு 75 ரூபாய் வரை விலை போனதாகவும் ஆனால் இந்த வாரம் கிலோவிற்கு 53 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை மட்டுமே விலை போனதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

மேலும் குறிப்பிட்ட வியாபாரிகள் மட்டுமே மறைமுக ஏலத்தில் கலந்து கொள்வதால் பருத்திக்கு உரிய விலை கிடைக்கவில்லை என கூறி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு முன்பாக பாபநாசம்- சாலியமங்கலம் சாலையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதை அறிந்த தாசில்தார் பூங்கொடி, மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் நலமுத்துராஜா, மாவட்ட ஒழுங்குமுறை விற்பனை கூட செயலாளர் சரசு, கண்காணிப்பாளர் தாட்சாயினி, போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி, சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், வருவாய் ஆய்வாளர் வரதராஜன், கிராம நிர்வாக அலுவலர் காயத்ரி ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது பருத்தி ஏலம் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் என்றும், விவசாயிகளுக்கு அதிகபட்ச விலை கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் எனவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் சாலை மறியலை விவசாயிகள் கைவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story